நெல்லை பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலையில் உள்ளது. இங்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தூத்துக்குடியில் 2019 ஆம் ஆண்டு ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விசாரணை கைதிகள் மருதுவேல், பாலசுப்பிரமணியன், சுந்தர மூர்த்தி, ஆகியோர் ஒன்றாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் இவர்கள் மூன்று பேருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு மருதவேல் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தகவல் அறிந்து வந்த சிறைத்துறை அதிகாரிகள் காயம் அடைந்த மருதவேலை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினரின் பாதுகாப்போடு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முத்துமனோ என்ற இளைஞர் சிறையில் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அங்கு மோதல் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் மீண்டும் இன்று கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதி முத்துமனோ அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ஒரு கொலை முயற்சி நடந்தது காவல்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாளை மத்திய சிறையில் அவ்வபோது கைதிகளுக்குள் ஏற்படும் மோதல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அதிகாரிகள் தலையிட்டு இது போன்ற மோதல் போக்கு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.