நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில் அந்த வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்களே உள்ளனர். மேலும் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் 7 பேரும் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வருகின்றனர். மேயர் சரவணன் பொறுப்பேற்ற சில நாட்களிலிருந்தே மாமன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்குமிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் கட்சி மேலிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது, கட்சியிலிருந்து கவுன்சிலர்களை நீக்கியது என பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் ஒவ்வொரு மாமன்ற கூட்டங்களிலும் இந்த மோதல் போக்கானது நீடித்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 6ம் தேதி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை என 38 மாவட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிற்கு கடிதம் அனுப்பினர். கையெழுத்திட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தும் சரிபார்க்கப்பட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு 12ம் தேதி நாளை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அனைத்து மாவட்ட உறுப்பினர்களுக்கும் தனித்தனியே டிசம்பர் 27ம் தேதி கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து கவுன்சிலர்களிடம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாதவாறு இணைந்து செயல்பட வேண்டும் என்றும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தி சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அதில் கவுன்சிலர்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது. எனவே அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பிறகும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்வதாக 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது, குறிப்பாக நெல்லை வண்ணார் பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மீண்டும் அவர்களிடம் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதோடு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பை முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கவுன்சிலர்களை தற்போது வெளியூர்களுக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக கவுன்சிலர்கள் சுமார் 25 பேர் நேற்று கேரளாவுக்கு சுற்றுலா செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள கவுன்சிலர்கள் இன்று கன்னியாகுமரி மற்றும் விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக உறுப்பினர்களை தவிர அனைத்து மாவட்ட உறுப்பினர்களும், வெளியூர் அழைத்துச் செல்லப்படுவதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்பு தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும், மாநகராட்சி ஆணையாளர் அறிவித்த பிறகே அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் பேசப்படுகிறது.