பல மாதங்களுக்கு பின் நடந்த மாமன்ற கூட்டம்:


திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் (பொறுப்பு) ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 45க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தின் பொருளாக இருந்த 130 தீர்மானங்களும், கூடுதலாக இன்று 63 தீர்மானங்கள் என 193 தீர்மானங்கள் பேரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இதில் 192 தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.  மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்ற நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டத்திற்கு சரவணனை தவிர பெரும்பாலான உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் உட்கட்சி பூசல் ஏதுமின்றி இன்றைய கூட்டம் நடந்து முடிந்துள்ளது.


தெரு நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:


தொடர்ந்து மாமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையாளர் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்களால் மட்டுமே நாய்களை கட்டுப்படுத்துவது, அதற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை  செய்வது, வெறி நாய் கடி தடுப்பூசி போடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் அதுபோன்ற அமைப்பு தற்போது இல்லை. ஏற்கனவே இருந்த அமைப்பின் உரிமம் காலாவதியாகி விட்டது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள தொண்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதைய நிலையில் உடனடியாக நாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியாது என்றார். மேலும் மாடுகளை சாலைகளில் விடுபவர்கள் களுக்கு முதல்முறை ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.




மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் ரம்ஜான் அலி பேசும் போது, ஆணையாளரின் அனுமதியின்றி 55 லட்ச ரூபாய்க்கு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. மாமன்றத்தின் அனுமதியும் பெறவில்லை, சுகாதார குழுவிடமும் அனுமதி பெறவில்லை. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என குற்றம் சாட்டினார். அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், மாமன்றத்தில் இதற்கான தீர்மானம் வைக்கப்படாத நிலையில் ஆணையாளரின் அதிகாரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த விலையில் பினாயில் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆணையாளர் மூலமாக கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் சுகாதாரத் துறை நேரடியாக இதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலரிடம்  (பொறுப்பு)   விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.