2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதற்கான அறிவிப்புகளும் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் வருவதற்கு முன்னே நெல்லையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருநெல்வேலி நாடார் சமுதாய மக்கள் என்ற பெயரில் நாடார்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமுதாயத்திற்கே அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாநகர முழுவதும் இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்,  2024 பாராளுமன்ற தேர்தலில்  நாடார்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாடார் சமுதாயத்திற்கே அளிக்கவும் என நாடார்  சமுதாய மக்கள் சார்பாக பொதுவாக  பெயர் எதுவும் இன்றி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுறாத நிலையில் உள்ளது. அதோடு கடந்த முறை திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் ஞானதிரவியம் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது நாடார் சமுதாயம் சார்பில் காங்கிரசுக்கு இடம் ஒதுக்கக்கேட்டு ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் கடந்த 29ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெள்ளாளர்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் நிறுத்த வேண்டுமென பாரதிய ஜனதா கட்சிக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் முன்னதாகவே பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவரும், தற்போதைய நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.  கட்சி தலைமையும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது உறுதியானதாகவும் அதன் காரணமாகவே சமீபத்தில் அவர் முதல் ஆளாக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இன்று நாடார் சமுதாயம் சார்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கும் பட்சத்தில் தான் இது போன்ற போஸ்டர் யுத்தம், கட்சியினரின் கோரிக்கை முடிவுக்கு வரும் என்று அதனை கடந்து செல்லும் மக்களால் பேசப்படுகிறது.