தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளையும் இல்லாமல் ஆக்கிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் தென்மண்டல தலைவர் கார்த்திசன், மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஒரு பாட்டிலில் கள் நிரப்பி கொண்டு வந்தனர். தொடர்ந்து அதனை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கள் குடித்து நூதனமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பெண்களும் கள் குடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதோடு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின் ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான மனுவை அளித்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உடையார் கூறும் பொழுது, "பண்டைய கால உணவு முறையை கடைபிடிக்கும் வகையில் கள், பதநீர் இறக்க ஸ்டாலின் அரசு அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாக பனை அழிந்து வருகிறது. இதனை இறக்கினால் பனைத் தொழிலை காக்க முடியும். தமிழக அரசு டாஸ்மாக்கை அதிகப்படுத்தி அனைத்து பெண்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே அதனை மாற்றி அமைக்க இந்த அரசு டாஸ்மாக்கை உடனடியாக மூடி, கள் பதநீர் இறக்க அனுமதி அளித்து தமிழக மக்களை காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கள் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கூறும் பொழுது, “டாஸ்மாக்கால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். உதரணமாக நானும் பாதிக்கப்படுகிறேன். எனக்கு 5 குழந்தைகள். எனது கணவர் இந்த குடியால் அடிமையாக இருக்கிறார். இதனால், எனது குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளேன். எனவே இதனை ஒழித்து விட்டு பதநீர், கள் இறக்கினால் என்னை போன்ற பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும்” என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்