அதிமுகவை ஒருங்கிணைக்கவும், 2026 இல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருக்கிறார் சசிகலா. அதற்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி தென்காசி வந்த அவர் அங்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தோடு மக்களிடையே உரையாடினார். இந்த சூழலில் நாளை மாலை நெல்லை மாவட்டத்தில் வருகை தரவுள்ள சசிகலா இங்கு  5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  இதற்காக தொண்டர்கள்  ஆயுத்த பணிகளிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாளை மாலை சசிகலா நெல்லை வருவதை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக வண்ணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அவரது   ஆதரவாளர்கள் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக  கொடியை பயன்படுத்தி வருகின்றனர்.  அலங்கார வளைவுகள்,  போஸ்டர்கள் உள்ளிட்டவற்றால்  இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 




இந்த சூழலில் ஏற்கனவே இரட்டை இலை சின்னம் மற்றும்  கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள உள்ள நிலையிலும்,  அனுமதி இன்றி சசிகலா ஆதரவாளர்கள் கொடி  மற்றும் சின்னத்தை  பயன்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் தச்சை. கணேச ராஜா தலைமையில் அதிமுகவினர்  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்  சசிகலா நெல்லை வருவதையொட்டி அவர் தங்கவிருக்கும் ஹோட்டலை சுற்றி  அதிமுகவின் கொடிகள் நடப்பட்டுள்ளது, மேலும் எங்களது கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட சசிகலாவிற்கு இந்த கொடியை, சின்னத்தை பயன்படுத்த எந்த  ஒரு அங்கீகாரமும், சட்டமும் இல்லை, நீதிமன்றம் தீர்ப்புப்படி எடப்பாடி தலைமையிலான அணிக்கு தான் அதிமுகவின் கொடியும், சின்னமும் பொருந்தும். அவர்களுக்கு தான் சொந்தம்.




எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வழிநடத்திய இந்த இயக்கத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு இந்த இயக்கத்தை விட்டு நீக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. இதற்காக இன்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். அந்த மனுவை பரீசிலினை  செய்வதாக சொல்லியுள்ளனர். சட்டப்படி அந்த கொடி, பதாகைகளை  அவர்கள் விலக்கி வைக்க வேண்டும். காவல்துறை செய்யத்தவறினால்  அதிமுகவினர் செய்ய வேண்டிய சூழல் வரும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும். அதனை பாதுகாக்க தவறிய குற்றம் காவல்துறையையே சேரும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.