நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது இட்டமொழி. இங்குள்ள சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மகாராணி(65). இவர் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று நள்ளிரவில் திடீரென சமையல் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. மகாராணியின் வீடு ஊருக்கு வெளியே தனியாக இருப்பதால் இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் மகாராணியும் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வழியாக வயல்வெளிக்கு சென்றவர்கள் பார்த்துள்ளனர், பின் பொதுமக்கள் அனைவரும் திரண்டு தீயை அணைத்து உள்ளனர்,
இந்த நிலையில் மகாராணி வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததுடன் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி இருந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீயில் கரிகட்டையாக கருகி இருந்த மகாராணியின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாவிற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் பெண்மணி ஒருவர் சிலிண்டர் வெடித்து தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்