நெல்லை மாவட்டம் டவுண் பாட்டப்பத்து பகுதியில் மையவாடி ( சுடுகாடு ) சுற்று சுவர் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை தொடங்கி வைப்பதற்காக  நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வருகை தந்து பூமி பூஜை தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ், அகில இந்திய பார்வர்டு கட்சி போன்றோர் கட்சியில் இருக்கின்றனர், இன்னும் பிற கட்சிகளோடு  பாஜகவின் அகில இந்திய தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜாபர் சாதிக் விவகாரத்தில் இந்த மண்ணில் மட்டும் ரூ.250 கோடி வருகிறது என்று சொல்கின்றனர். அதேபோல உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரைத்துறையினருடன் உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இது இந்த சமுதாயத்துக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். யார் இந்த குற்றத்தை செய்தாலும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இதுவரை கைது செய்ததாக செய்தி வந்துள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  அதே போல டாஸ்மாக் கடையை மூட வேண்டும். அப்போது தான் பள்ளி மாணவர்கள் அதே போல வருங்காலத்தில் வரும் யாரும் குடிக்காமல் இருப்பார்கள் என்று தெரிவித்தர். பாஜகவில் அடுத்த கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் விரைவில் வரும்.


தொடர்ந்து நெல்லையில் பாஜக போட்டியிடுமா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, நெல்லையில்  நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் போட்டியிடுவார் என்றார். அதே போல சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே அது அப்பறமா சொல்லிக்கலாம் என்றார். மேலும் புதுச்சேரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகப்பெரிய மனிதாபமற்ற செயல். இதுபோல ஒரு செயல் இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த பகுதியிலும் நடைபெறக்கூடாது என்றும் இதுபோல் செயலில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்