கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் வார்டு வாரியாக  இருசக்கர வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் மேயர் மகேஷ், குறைகளை அறிந்து அவற்றை சீர் செய்திட மதிப்பீடு தயார் செய்து, நிதி வந்ததும் முன்னுரிமை அடிப்படையில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.    

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மொத்தம் 53 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் வார்டு வாரியாக மாநகர மேயர் மகேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு செட்டி தெருவில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தேவையான பணிகள் செய்திட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது மாநகர அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் மகேஷ் அந்த பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், மிக மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

 



 

இதுகுறித்து பேட்டி அளித்த மேயர் மகேஷ் கூறுகையில், 52 வார்டுகளிலும் ஒரு மாதத்திற்குள் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்து குறைகள் கண்டறியப்பட்டு, குறைகளை சரி செய்வதற்கான மதிப்பீடு தயார் செய்து நிதி வந்ததும் முன்னுரிமை அடிப்படையில் அந்த குறை நிவர்த்தி செய்யப்படும். இதன் மூலம் பொது மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அதை தீர்க்க முடியும் என்றார். நகர மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டரிவதன் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை மேயர் என்ற முறையில் அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் செய்து முடிக்கவும் தற்போது அதிகாரிகளை கொண்டு முடிக்க வேண்டிய பணிகள் குறிப்பாக குப்பை அகற்றுவது , தேவை இல்லாமல் உள்ள மின் கம்பங்களை அகற்றுவது , கழிவு நீரோடையில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றி தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தினசரி அதிகாரிகளை கொண்டு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

 



 

ஆய்வின் போது மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் மேரி ஜெனட் விஜிலா, மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.