குமரி மாவட்டத்தில் 4 வழிச் சாலை திட்ட பணிக்காக காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ. தூரம், அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டர் தூரம், அப்டா மார்க்கெட் முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு 2016 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையிலான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் முடிய மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கிடையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த டோல்கேட் வருகிற 24-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது. முன்பு 47 பி என இருந்த நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை, திருத்தப்பட்டு இனி தேசிய நெடுஞ்சாலை எண் 944 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
இதுகுறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்பி விஜய்வசந்த் வெள்ளமடம் அருகே அமைக்கபட்டு உள்ள டோல் கேட்டை- ஐ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டி அளித்த விஜய் வசந்த் கூறுகையில்,
ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை நான்கு வழி சாலை பணிகளுக்கு திட்டமிடப்பட்டு 60 சதவிகித பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றதால் அரசியல் கால் புணர்ச்சி காரணமாக மீதமுள்ள சாலை பணிகளையும் முடிக்காமல் பாஜக அரசு பணிகளை கிடப்பில் போட்டதாகவும், கல் மணல் இல்லை என காரணம் கூறி பணிகளை கிடப்பில் போட்டவர்கள், 2024 பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அப்பணிகளை மீண்டும் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் .மாவட்டம் முழுவதும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையாமலேயே முடிவடைந்த சாலையில் டோல்கேட் அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் பண்ண மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள டோல் கேட்டை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.