ஆத்தூர் அருகே புன்னக்காயல் மீனவ கிராமத்தில் 840 மீனவர்கள் மற்றும் 60 மாற்றுத்திறனாளிகள் ஆக மொத்தம் 900 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா புன்னக்காயல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டாக்களை வழங்கி தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் துறை அதிகாரி அஜய் சீனிவாசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசும்போது,எல்லோருக்கும் நமக்கென ஒரு வீடு வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மேலும் அந்த வீடு நமக்குப் பிறகு நமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த வீட்டில் எல்லா உரிமைகளும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கனவு நமக்கு எல்லோருக்கும் உண்டு.புன்னகாயல் மீனவர்கள் தங்களது இடங்களுக்கு பட்டா பெறுவதற்காக கடந்த 24 ஆண்டுகளாக போராடி இருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சியில் இந்த பட்டா வழங்கும் நடவடிக்கை முடிக்க முடியாத நிலை ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு இந்த முயற்சிகள் தற்போது தற்போதைய தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையால் இங்கு வசிக்கும் 840 மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்பு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இங்கே வழங்கப்பட்டுள்ள 840 வீட்டுமனை பட்டாக்களுடைய மதிப்பு ரூ.13 கோடியே 13 லட்சம் ஆகும். இது தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால ஆட்சியில் சாதனையை நாம் கொண்டாடப்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.இதுபோக இந்த கிராமத்திற்கு சாலை வசதி, நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் ரூ.2 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீன் இறங்கு தளம், வலை பின்னும் தளம் ஆகியவைகளும் அமைக்கப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், நமது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மிகவும் அக்கறையோடு இந்த அரசின் சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவர் சாதி மத பேதமின்றி மக்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதுபோல பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். அவருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்