தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புத்தக வெளியீடு மற்றும் தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த டிஜிட்டல் பராமரிப்பு முறைக்காக தாய் கேர் நெல்லை என்ற புதிய செயலி அறிமுக நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டுபாட்டு அறையில் நடைபெற்றது.
தாய் கேர் நெல்லை செயலியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் தரவுகளை பார்வையிட்டதுடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் பிரிவு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறும் பொழுது, தமிழக அரசின் ஓராண்டு சாதனையாக பல்வேறு திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் நாட்டின் முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தாய் கேர் நெல்லை என்ற செயலி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பு செய்து அவர்களின் முழு உடல் பரிசோதனை தரவுகளும், டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகள் இல்லாத நிலையை மாவட்டத்தில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். நெல்லை மருத்துவகல்லூரி தாய் சேய் நல மருத்துவ வல்லுநர்கள் கொண்டு கர்ப்பிணி தாய் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனை மற்றும் ஊட்டசத்து தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும்.
இந்த திட்டம் தமிழகத்தில் நெல்லையில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தமிழகத்தின் முன்னோடி திட்டங்கள் அரசால் பல முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லை நீர்வளம், பொருநை அருங்காட்சியகம், நெல்லை க்ராப்ட்ஸ் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் 3 முக்கிய நோக்கங்களை முன்வைத்து அடுத்த கட்ட செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தப்பட உள்ளது. திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிடவைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில் மல்டி செபாசிலிட்டி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தில் வயதான மற்றும் ஆதரவற்றவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்