பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் சீரமைத்து மேம்படுத்தப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.




தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது,தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து, அடுத்தகட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடிநீர் பராமரிப்பு பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகள் மற்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்க நிதியுதவி பெறப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடக்கத்தில் தொடங்கப்படும். பெரும்பாலான சாலைகளை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.





அதுபோல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பூங்காக்களில் அதிகளில் கூடுவார்கள். எனவே, மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா போன்றவை சீரமைக்கப்படவுள்ளன. இதேபோல் வடக்கு மண்டல பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.




மேலும், திருச்செந்தூர் ரவுண்டானா அருகே பாதயாத்திரை பக்தர்கள் வசதிக்காக பூங்கா அமைக்கும் பணிகள், முள்ளக்காடு பகுதியில் உள்ள குளத்தை சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகள் போன்ற பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் தற்போது மாலை 6 மணி வரை மட்டுமே இயங்குகிறது. அது இரவு 10 மணி வரை செயல்படும் வகையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படும்.




மேலும், மாநகர பகுதியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் முறையாக ஆய்வு செய்து, அனைத்தும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் சப்ளை செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. குடிநீர் கசிவுகள் காணப்படும் பகுதிகளை கண்டறிந்து அவைகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.




அதிமுக உறுப்பினர் மந்திரமூர்த்தி பேசும்போது, மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்நல மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயாராக உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நகர்நல மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயாராக உள்ளன. இருப்பினும் உறுப்பினர் கோரிக்கையை ஏற்று ஆய்வுகள் செய்யப்படும் என்றார்.