கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தோவாளை அருகே சோழன் புக் ஆப் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அருகே உள்ள தாமரைக் குட்டிவிளையை சேர்ந்த ஸ்டராங் மேன் கண்ணன் என்ற சாதனையாளர் சாதனை புரிய முன்வந்தார். சோழன் புக் ஆப் நிறுவனத்தார் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சாதனை புரிந்து வெற்றி அடைந்தார். 14 டயர்களைக் கொண்ட 13.50 டன் எடை கொண்ட லாரியை கயிறு கட்டி இழுத்து 111 மீட்டர் தூரத்தை 4 நிமிடத்தில் இழுத்து உலக சாதனை புரிந்தார். அவருடைய சாதனைக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்தனர். கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கண்ணன் ஏற்கனவே 9.30 டன் எடை கொண்ட லாரியை 90 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார் அதன் பின்பு உத்திரகாண்டிலும் பஞ்சாபிலும் சென்று இதுபோன்று வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பளு தூக்கும் போட்டியில் சவால் விட்ட ஆப்பிரிக்க வீரரை அசால்டாக தோற்கடித்தார். அடுத்த உலக சாதனை நிகழ்ச்சி விரைவில் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதில் தான் பங்கேற்க தயாராகி வருவதாகவும் சர்வதேச அளவில் சாதனை புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால் தமிழக அரசு தங்களைப் போன்ற சாதனையாளர்களை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் விடுவித்தார்.
கனிம வளங்களை திருடிய லாரிகளை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தலுக்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அமைச்சரும், தமிழக அரசுதான் காரணம் என மத்திய முன்னாள் அமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறி வரும் நிலையில் தீர்வு எதுவும் ஏற்படாததால், இரவு குலசேகரம் பகுதியில் கனிமவள கடத்தலில் அதிக பாரம் ஏற்றி வந்த 10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை பொதுமக்களே நேரடியாக இறங்கி சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் குமரி மாவட்டம் வழியாக தினசரி கேரளாவிற்கு கருங்கல், ஜல்லி , மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் பல இடங்களில் அனுமதியின்றி செயல்பட்டு கனிம வளங்கள் கடத்தப்படுவது பொதுமக்கள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கனிம வளங்கள் கடத்தலுக்கு காரணம் மத்திய அரசுதான் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதற்கு முன்னாள் பாஜக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும் கட்சி அரசு . எனவே தமிழக அரசு தான் இதற்கு பொறுப்பு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்து எடுக்காமல் இருக்கிறார்கள் என்றார். இப்படி மத்திய, மாநில அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே காலத்தை கடந்து செல்கிறது தவிர கனிமவள கடற்கரை தடுப்பதற்கான எந்த தீர்வும் ஏற்படவில்லை என பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் குலசேகரம் பகுதியில் அந்த வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி சென்ற 10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை பொதுமக்களே களமிறங்கி நேரடியாக சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து வந்து லாரிகளில் அதிக பாரம் இருப்பதை சோதனை செய்து செய்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் பொதுமக்களே நேரடியாக களம் இறங்கி கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரிகளை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.