குமரி மாவட்டம் நாகர்கவிலுக்கு அருகே சீயோன்புரத்தைச் சேர்ந்தவர் செல்வ ஜெயசிங் (68), கொத்தனார் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இவருக்கு  தங்கம் (65) என்ற மனைவியும், சதீஷ் (35), ஏசுஜெபின் (32) என 2 மகன்களும் உள்ளனர்.  சதீஷ்க்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். செல்வ ஜெயசிங், தங்கம் மற்றும் இளையமகன் ஏசுஜெபின் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று செல்வ ஜெயசிங், அவரது மனைவி தங்கம் ஆகியோர் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.  இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது இளைய மகன் ஏசுஜெபினை போலீசார் கைது செய்தனர். 

 



 

கைது செய்யப்பட்ட ஏசுஜெபின் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனது அண்ணன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். எனது தந்தை படுத்த படுக்கையாக இருந்ததால் எனக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தினமும் போதையில் தகராறு செய்து வந்தேன். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் இருந்த சாப்பாடு குழம்பு ஆகியவற்றை கீழே கொட்டினேன். தினமும் குடித்து விட்டு வந்து துன்புறுத்துகிறாயே இனி நானும் அம்மாவும் உலகத்தில் இருப்பதைவிட சாவதே மேல் என கூறினார். 



 

உடனே நான் நீங்கள் இருவரும் உயிரோடு இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. இருவரும் செத்து தொலையுங்கள் என்று கூறிவிட்டு வழக்கம்போல் மாடிக்கு சென்றேன். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தபோது எனது பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்திருந்தனர். இவ்வாறு அவர் கூறினார். போலீசார் கைது செய்யப்பட்ட ஏசுஜெபினை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.