தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

 

தமிழ்நாட்டில் 4,35,621 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து 47,064 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்புக் கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகின்றது.

 



 

விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்து தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 51,000 மெட்ரிக் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதாரவிலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரையை எளிதில் கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 51,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.

 



 

பந்து கொப்பரை மற்றும் அரவைக் கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிக்கு 110 ரூபாய் மற்றும் அரவைக் கொப்பரைக்கு  105.90 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி அடுத்த ஆறு மாதங்கள் நடைபெறும். 1000 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 50,000 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்திட அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்னைக்கூடத்தின் மூலம் தலா 400 மெட்ரிக் டன் அரைவ கொப்ரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மேற்படி கொள்முதல் நடைபெற உள்ளதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது நிலச்சிட்டா, அடங்கல், பட்டா, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.



 

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாஃபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் இத்தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம். மேலும் விவரங்களுக்கு வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் (9791834902) மற்றும் மேற்பார்வையாளர் (8015644640)இ திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் (9092671255) மற்றும் மேற்பார்வையாளர் (8270038968) அவர்களின் அலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 



 

தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகின்றது. கொப்பரைத் தேங்காய்க்கான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரைக் குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.