அரசு பணிகள் முடக்கம்:


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க தமிழக அரசு பல கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது இந்த பணிகள் முடங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் சாலை சீரமைப்பு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் அமைத்தல் சிறு பாலங்கள் அமைத்தல் தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் கேப்ரோடு உள்பட பல்வேறு சாலைகள் சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.50 கோடியிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.105 கோடியிலும் பேரூராட்சிகளில் ரூ.50 கோடி மதிப்பிலும் பணிகள் தொடங்க உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு ஜல்லி கற்கள், எம்-சாண்ட் உட்பட கனிம வளங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கிடைத்து வந்தது.


தட்டுப்பாடு:




இந்த நிலையில் நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் ஜல்லிக் கற்கள் எம்.சான்ட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜல்லி மற்றும் எம்.சாண்ட் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு கட்டுமான பணிகளும் முடங்கியது. அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாலப் பணிகள் சாலை பணிகள் முடங்கியது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.


ஒரே ஒரு கல்குவாரி செயல்பட அனுமதி:


இந்த நிலையில் முடங்கிக் கிடக்கும் சில பணிகளை மேற்கொள்ள வசதியாக குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அங்கிருந்து அரசு பணிகளுக்கு ஜல்லி கற்கள் வழங்கப்பட்டது. தற்போது அந்த கல் குவாரியில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பணிகளுக்கு கனிம வளங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்த அரசு பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.


குற்றச்சாட்டு:




மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள கல்குவாரியில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பணிகளுக்கு ஜல்லி கற்கள் வழங்காமல் கேரளாவிற்கு அதிக விலைக்கு ஜல்லிக்கற்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒப்பந்தகாரர்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து அரசுப் பணிகள் செய்வதற்கு கனிமவளங்கள் வழங்க கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அங்கிருந்து கனிம வளங்கள் கிடைத்தது. தற்போது திடீரென அரசு பணிகளுக்கு அந்த கல் குவாரியில் இருந்து கனிம வளங்கள் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக கன மீட்டர் ரூ.2000 வரை கேரளாவில் இருந்து வந்து வாங்கி செல்கிறார்கள். கலெக்டர் உத்தரவுப்படி எங்களுக்கு கனிம வளங்கள் தராமல் கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.


நடவடிக்கை:


எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு அரசே நேரடியாக கொள்முதல் செய்து அரசு நிர்ணயித்த விலையில் எங்களுக்கு வழங்க வேண்டும். தற்போது குமரியில் உள்ள விலைக்கு கனிம வளங்களை வாங்கி பணி செய்தால் 50 சதவீதம் வரை எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண