உச்சிப்புளி அருகே ரூ.2.50 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்கக் கட்டிகள் பைபர் படகுடன் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தப்பியோடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக தங்கக் கட்டிகள் மர்மப் படகில் கடத்தி வரப்படுவதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இன்று மதியம் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் வேதாளை - சீனியப்பா தர்கா இடையோன மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவு பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.




அப்போது சந்தேகத்திற்கிடமான பதிவு எண் இல்லாத பைபர் படகு  தீவு பகுதிகளுக்கு அருகே விரைவாக வந்தது அந்த  பைப்பர் படகை சுங்கத்துறை அதிகாரிகள் கரையில் வைத்து பிடிக்க பின் தொடர்ந்தனர். சுங்கத்துறை அதிகாரிகள்  பின் தொடர்வதை அறிந்து கொண்ட பைபர் படகில் வந்த இருவர் அதிகாரிகள் பின் தொடர்வது குறித்து யாரிடமோ தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உச்சிப்புளி  - புதுமடம் அருகே நொச்சியூரணி கடற்கரை அருகே உள்ள பவளப்பாறை மீது படகை மோதச் செய்து பின் இருவரும் கரையில் குதித்தனர். அப்போது அங்கு காத்திருந்த இரு சக்கர வாகனத்தில்  இருவரும் தப்பிச் சென்றனர்.  


பின்னர் பவளப் பாறையில் சிக்கிய பைபர் படகை டிராக்டர் மற்றும் ஜேசிபி உதவியுடன்  கட்டி இழுத்து படகை கரைக்கு எடுத்து வந்து சோதனை செய்தனர். அப்போது படகில் சுமார் 5 கிலோ 27 கிராம் தங்கக்கட்டி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 2.5 கோடி இருக்கலாம் என சுங்கத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பி சென்றவர்கள் படகில் இருந்து மேலும் தங்க கட்டிகள் கொண்ட பார்சலுடன் தப்பிச் சென்றனரா? கடத்தல் தங்கத்தை இலங்கையில் இருந்து எடுத்து வந்த இலங்கை நபர்கள் தீவுகள் பதுங்கியுள்ளனரா என மரைன் போலீஸ் தேடி வருகின்றனர்.


அடுத்தடுத்து கிலோ கணக்கில் கடத்தல் தங்கம் நடுக்கடலில் பிடிபடுவது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கடற்கரை கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.