தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2-ந் தேதி குமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 3, 4-ந் தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் தீவிரமாக முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சாரல் மழை மட்டுமே பெய்தது. இரவில் 11 மணிக்கு மேல் பரவலாக மழை பெய்தது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதேநிலையே நேற்றும் நீடித்தது. அதே சமயத்தில் வானம் காலையில் இருந்தே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையும் பெய்யவில்லை. நாகர்கோவிலில் மதியம் 2 மணி அளவில் திடீரென வெயில் காணப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த வெயிலும் மறைந்தது.

 


 

 

 காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

 

பெருஞ்சாணி -26.6

பேச்சிப்பாறை -24.8

புத்தன் அணை -24.8

பாலமோர் - 22.4

சிவலோகம் -17.8

திற்பரப்பு - 17.4

கோழிப்போர்விளை - 15.4

சுருளோடு - 14.2

கன்னிமார் -12.2

ஆனை கிடங்கு -12

சிற்றார், 1 - 11.6

மாம்பழத்துறையாறு - 10.2

 

என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 26.6 மிமீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

 



 

அணை பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குழித்துறையில் உள்ள தடுப்பணையை மூழ்கடித்தபடி செல்கிறது. எனவே அந்த வழியாக 2-வது நாளாக மக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

இந்த மழையின் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம். 

 

பேச்சிப்பாறை - 39.30 அடி

(கொள்ளளவு 48 அடி)

நீர் வரத்து - 1078 கன அடி/ sec.

நீர் திறப்பு - 250

 

பெருஞ்சாணி - 64.15 அடி 

(கொள்ளளவு 77 அடி)

நீர் வரத்து - 757 கன அடி

வெளியேற்றம் - இல்லை   

 

மாம்பழத்துறையாறு - 34.45 அடி 

(கொள்ளளவு 54.12 அடி)

நீர் வரத்து - 11 கன அடி 

வெளியேற்றம் - இல்லை

 

பொய்கை அணை - 17 அடி 

(கொள்ளளவு 42.65 )

நீர் வரத்து - இல்லை 

வெளியேற்றம் - இல்லை 

 

சிற்றார் - 1 - 12.60 அடி 

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - 93 கன அடி  

வெளியேற்றம் - இல்லை

 

சிற்றார் - 2 - 12.69 கன அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - 147 கன அடி  

வெளியேற்றம் - இல்லை

 

இந்த மழையினால் தோவாளை தாலுகா பகுதியில் ஒரு மரமும், விளவங்கோடு தாலுகா பகுதியில் ஒரு மரமும் என மொத்தம் 2 மரங்கள் விழுந்தன.

 



 


குமரியில் இருந்து மேலும் ஒரு முக்கிய செய்தி..

 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்கள் பங்கேற்று நெற்கதிர்களை பெற்று சென்றனர்.

 



 


கன்னியாகுமரி மாட்டத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது. வயல்களில் விளைந்த நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக பூசாரிகள் வழங்கினார்கள். ஆவணி மாதம் நெல் அறுவடையில் அதிக மகசூல் கிடைத்து வீடும் நாடும் செழிக்க வேண்டி, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோவில்களில் இந்த பூஜைகள் பாரம்பரியமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 


 

நாடு முழுவதும் விவசாயம் செழித்தோங்க வேண்டுமென்பதற்காக விவசாயி தான் உற்பத்தி செய்த முதல் கதிரை இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு படைக்கபட்ட நெற்கதிர்களை பெற்று வீடுகளுக்கு கொண்டு சென்றால் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவில் உட்பட, கேரளா ஐதீக முறைப்படி நிறைப்புத்தரிசி பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் சாமி சன்னதியில் நெற்கதிர்கள் , மாவிலை, நொச்சி, உழிஞை உள்ளிட்ட மூலிகைகள் படைக்கபட்டு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. இந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளில் கட்டுவதால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமென்பது நம்பிக்கையாக உள்ளது. அதிகாலையில் நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் கேரளா தமிழகத்திலிருந்து பக்தர்கள் பங்கேற்று நெற்கதிர்களை பெற்று சென்றனர்.