நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை டவுணில் இருந்து மணப்படை வீடு செல்லும் அரசு பேருந்தில் சுப்பிரமணியன் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் நெல்லை மாவட்டம் பாலமடையைச் சேர்ந்த பாஸ்கர் நடத்துனராக பணியில் இருந்தார். பேருந்து நெல்லை பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னம் பொறித்த போஸ்டரை பேருந்தின் வாசலில் ஒட்டி விட்டு முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளார்.


இதனை பார்த்த நடத்துனர் பாஸ்கர், இது அரசு பேருந்து. எனவே அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தடுத்துள்ளார். அதற்கு மருதுபாண்டி, இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சா என கேட்டதுடன் அறுவறுக்கத்தக்க வார்த்தையால் பாஸ்கரை திட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஓட்டுனர் சுப்பரமணியன் மருதுபாண்டியை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி அருகில் கடையில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து அதன் கூர்மையான பகுதியை வைத்து ஓட்டுனர் சுப்பிரமணியன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த காயம் அடைந்த ஓட்டுநர் சுப்ரமணியன் நெல்லை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஓட்டுனர் சுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் மருதுபாண்டி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்பட ஐந்து பிரிவுகளின் ( 307, 294(பி) 323, 353, 506ந(ii) ) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய மருது பாண்டியை அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்னும் ஓரிரு நாளில் நிறைவடைகிறது. இது போன்ற சூழ்நிலையில் நெல்லையில் பாஜக பிரமுகர் அரசு பேருந்தில் அரசியல் போஸ்டரை ஒட்டியதோடு தடுக்க சென்ற ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.