நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நெல்லை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஜனநாயக புகழை சீர்குலைக்கும் செயலை பாராளுமன்றத்தில் செய்துள்ளனர். தேச விரோத சக்திகள் இந்த விவகாரத்தில் துணையாக உள்ளனர். பாராளுமன்ற விவகார பின்னணியில் இருக்கும் சதிகாரர்களை கண்டறியவேண்டும். நாடாளுமன்றத்தை யாராலும் முடக்க முடியாது என்ற துணிச்சலோடு கூட்டம் நேற்று தொடர்ந்து நடத்தப்பட்டு பல முக்கிய சட்டங்களை கொண்டுவந்துள்ளது. மத்திய பாஜக அரசை நாங்கள் பாராட்டுகிறோம். பாராளுமன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 3 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்று சாதரண மக்களுக்கு முதல்வர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாத படி கடும் கூட்ட நெரிசல் எற்பட்டுள்ளது.


ஏற்கனவே முன்பதிவு செய்து தான் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வியாபார தளமாக சபரிமலையை கேரள மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு வேறுபாடுடன் கண்டு வருகிறது. சபரிமலையின் புனிதத்தை கெடுக்கவே கேரள அரசு செயல்பட்டு வருகிறது. சபரிமலை செல்லும் ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்டத்திற்கு 5000 பேருக்கு இந்து அறநிலையதுறை புனித யாத்திரை மாநிலம் வழங்க வேண்டும். சபரிமலையில் தமிழக அரசு யாத்திரை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும், சபரிமலை பக்தர்களுக்கு டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சபரி மலை பக்தர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மார்கழி 1ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் டோல் கேட்டுகளில் இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது. சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக மக்கள் வங்கி கணக்கில்   வழங்க வேண்டும். அரசின் உதவி தொகை ₹6000 போதாது 12 ஆயிரமாக வழங்க வேண்டும். மின்கட்டணத்தை முழுதும் ரத்து செய்யவேண்டும். இ.எம்.ஐ கட்டும் தவணையை 3 மாதத்திற்கு பின்னர் வசூல் செய்யவேண்டும். கொரானா காலத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல வெள்ள பாதிப்பு பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும். 17ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூடுதலாக வழங்கவேண்டும் என கோரிக்கை ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரணமாக ₹50 ஆயிரம் வழங்கவேண்டும் என தற்போது உள்ள முதல்வர் கேட்டுவிட்டு ₹6000 வழங்குவது நியாயமானதல்ல. வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சென்னை பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்ககேட்டு பேசாமல் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். அண்ணா பிரிவினைவாத கோரிக்கையை ஏற்கனவே கைவிட்டு விட்டார். திக விற்கு எதிராக தொடங்கப்பட்டது தான் திமுக. பிரிவினை வாத பேச்சை அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் கைவிட்டு பேசாத நிலையில் பிரிவினை வாதப்பேச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர். பிரிவினை வாதத்தை ஆதரித்து திமுகவினர் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர். பிரிவினை வாதம் பேசும் திமுக மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


முக ஸ்டாலின் தலைமையிலான திமுக பிரிவினை வாதத்தை ஆதரித்து பேசுகிறது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசும் திமுகவை மத்திய அரசு தடை செய்யவேண்டும். சென்னை தத்தளிக்கும் போது சேலம் மாநாடு தேவையில்லாதது. மதவாத அரசியலை திமுகவும், அதிமுகவும் தான் ஊக்குவிக்கிறது. ஸ்ரீ ரங்கம் கோவில் கருவறை முன்பு பக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வன்மையாக கண்டிக்கக்கூடியது. தமிழகத்தில் சிவாய நமக, கோவிந்தா கோஷம் போடவும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. அரசு சார்பில் திருக்கோவில் பாதுகாப்பு பணிக்கு திருக்கோவில் பாதுகாப்பு படை என்பதை உருவாக்க வேண்டும். அதன்மூலம் கோவில் பாதுகாப்பு பணி, பக்தர்கள் வருகை, ஒழுங்குபடுத்துதல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.