தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.45 கோடியே 23 லட்சம் செலவில் 66 கிலோ மீட்டர் தூரத்துக்கான 421 தார் சாலை அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, அகில இந்திய வானொலி நிலையத்தின் சொத்துவரி நிலுவைத் தொகையை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் தற்போது தண்ணீர் வினியோகம் குறைந்து இருப்பதாக புகார்கள் வருகின்றன. அதே நேரத்தில் தண்ணீரின் சுவையும் மாறி உள்ளது. இதனை எப்படி சரி செய்யப் போகிறோம். முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தூத்துக்குடி அண்ணா சிலை அருகே கீரை வியாபாரி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து உள்ளார். அவருக்கு மாநகராட்சி சார்பில் வாய்ப்பு இருந்தால் இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும். மாநகராட்சியின் நுழைவு பகுதியான மதுரை பைபாஸ் ரோட்டில் மின்விளக்குகள் இன்றி இருட்டாக உள்ளது. அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பக்கிள் ஓடை அருகே உள்ள சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 60, 52-வது வார்டு பகுதியில் உள்ள குடோன்களில் உள்ள மக்காச்சோளத்தில் இருந்து வந்த வண்டுகளால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த மக்காச்சோளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது,  தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அதன்படி 9 பூங்காக்கள் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தலைவர் கலைஞர் பல திட்டங்களை தந்து உள்ளார். அவரது நினைவை போற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட பல அடுக்கு வாகன காப்பகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றுக்கு கலைஞரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கட்டிடங்களுக்கு சொத்து வரி ரத்து செய்து சேவை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் வரி வசூலில் தூத்துக்குடி மாநகராட்சி 5-வது இடத்தில் உள்ளது. ரூ.19 கோடி வராக்கடன் உள்ளது. 




மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு போதுமான தண்ணீர் ஆற்றில் இல்லை. அடியில் உள்ள தண்ணீரை எடுத்து வழக்கமான முறையில் சுத்திகரித்து வழங்கப்படுவதால் தண்ணீரின் சுவையில் மாற்றம் உள்ளது. எந்தவித ஆழ்துளை கிணறும் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரும் போது வழக்கம் போல் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். 




பழைய பொருட்களை பெறும் திட்டம் தற்போது 22 இடங்களில் செயல்படுகிறது. 5-ந் தேதிக்கு பிறகு மாநகராட்சி, புதிய பஸ்நிலையம் பகுதிகளில் அந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். எட்டயபுரம் ரோட்டில் 30 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதே போன்று துறைமுகத்தில் இருந்து விமான நிலையம் வரை மின்விளக்குகள் அமைக்கவும், எட்டயபுரம் ரோட்டில் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி வரையும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மக்காச்சோளம் குடோன்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கெட்டுப்போன மக்காச்சோளத்தை விரைந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2030-ம் ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனாலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.