ஆடி அமாவாசை திருவிழா:


நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து குடில்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா போல் நடைபெறும். ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். மேலும் பலர் திருவிழா தொடங்கியதும் வந்து அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்து திருவிழா முடிந்ததும் செல்வர். இந்த நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழாவானது கடந்த 22 -ந் தேதி விழாவானது கால் நாட்களுடன் திருவிழா தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை அன்று வருகிற ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.




பக்தர்களுக்கு விழிப்புணர்வு:-


ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க  வேண்டியது குறித்து வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்படும். அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வர அனுமதி இல்லை. வனத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், ஆயுதங்கள், கூரிய கத்திகள், மதுபாட்டில்கள் மற்றும் இதர தடை செய்யும் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது, வனத்திற்குள் தீ ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை.. கோயில் வளாகத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்த குத்தகைகாரர்கள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய கூடாது, காகிதப்பைகள் மற்றும் துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும், கடைகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சூதாட்ட அட்டைகள், போதைபாக்குகள், பிளாஸ்டிக் கப், தட்டு, கவர்கள், பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்யக்கூடாது. காட்டுப்பறவைகளின் நலன் கருதி பிராய்லர் கோழிக்கடை வைக்க அனுமதியில்லை, ஆற்றில் குளிக்கும் பக்தர்கள், சிறுவர்கள், அபாயகரமான ஆழமான பகுதியில் குளிப்பதற்கு செல்லக்கூடாது. குப்பைகளை ஆங்காங்கே கொட்டாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. அதே போல கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறுமி ஒருவர் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ மூலமும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.




சீரமைப்பு பணிகளும், சுற்றுலா பயணிகளுக்கு தடையும்:


இதையொட்டி சுமார் 200 தற்காலிக கழிப்பறைகள் பணிகள் அமைக்கும் பணிகள், குடில்கள் அமைக்கும் இடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நுழைவாயில், மேற்கூரை உள்ளிட்ட பகுதியில் வர்ணம் பூசுதல், சீரமைப்புகள், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதனால் 2 ஆம் தேதி வரை கோவிலுக்கு செல்ல அனுமதியானது மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா தளங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் அகஸ்தியர் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள்  சூழல் சுற்றுலா செல்வதற்கும், அங்குள்ள அருவிகளில் சென்று குளிப்பதற்கும்  இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 9-ம் தேதி முதல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.