தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள்.. ஒன்று அண்ணாமலை, மற்றொருவர் ஆளுநர் ஆர்.என்.ரவி - கே.எஸ்.அழகிரி விமர்சனம்
'காங்கிரஸ் அதிகாரத்திற்காக தொடங்கிய கட்சி அல்ல மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தரவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தொடங்கப்பட்ட இயக்கம்' - கே.எஸ். அழகிரி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிற 7- ந்தேதி இந்திய நாட்டை ஒருங்கிணைக்கும் நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இதுதொடர்பாக நெல்லை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை தனியார் மண்டபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, “வருகிற 7- ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை எங்களது தலைவர் ராகுல் காந்தி நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இது தமிழக மக்களுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இது மிகுந்த மகிழ்ச்சியான பெருமையான ஒரு தருணம். இது எங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக நாங்கள் கருதுகிறோம். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியர்கள் என்ற உயரிய கருத்தை மக்களிடையே பரப்புவது, மக்களிடையே சமயம் மொழி ,இனத்தின் பெயரால் பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்வது. மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்து போய் இருக்கிறது. புதிய வரி விதிப்பின் காரணமாக வியாபாரிகள் பெருமளவு மிகுந்த நஷ்மடைகின்றனர். பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஜிஎஸ்டி வரி விகிதம் வியாபாரத்துறையினரை கசக்கி பிழிகிறது என இவைகளையெல்லாம் மக்களிடத்தில் சொல்லி ஒரு புதிய ஒற்றுமையான மகிழ்ச்சியான வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு தான் இந்த பயணத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த பயணம் தமிழகத்தில் நான்கு நாட்கள் நடக்கிறது, ராகுல்காந்தியின் நடைப்பயணம் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு இவர்களின் தவறான பொருளாதார கொள்கை தான் காரணம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளது இன்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதாலும் அவர்களுக்கு பதவி இல்லை என்பதாலும் விலகிச் செல்கின்றனர். இது போன்று விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து வருகிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சி வீழ்ச்சி துரோகம் என பல்வேறு நிகழ்வுகளை சந்தித்துள்ளது. காங்கிரஸ் அதிகாரத்திற்காக தொடங்கிய கட்சி அல்ல மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தரவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தொடங்கப்பட்ட இயக்கம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழக பாஜக தலைவர் விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். எதை வேண்டுமானாலும் பேசக்கூடியவர். அவருக்கு யாரோ தவறாக சொல்லி கொடுத்து உள்ளனர், இது போன்று முரண்பாடாக பேசினால், முரண்பாடாக செயல்பட்டால் செய்தியில் தினம் வருவீர்கள் என்று. அதை வைத்துக் கொண்டு முரண்பாடாக செயல்படுவதோடு ஒரு கட்சியை குற்றம் சாட்டும் பொழுது கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் பழக்கத்தையும் வைத்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன ஒரு சவால் என்றால் இன்னொரு பிஜேபி தலைவர் தமிழகத்திற்கு வந்துவிட்டார். அவர் இவரை விட வேகமாக பேசுவதால் ஊடகங்களின் கவனம் அந்த பிஜேபி தலைவரை பக்கம் போய் இவர் பக்கம் குறைந்து விட்டது என்று விமர்சித்தார். இதனால் தமிழகத்தில் இரண்டு பிஜேபி தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்” என்றும் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்