தென்மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தான ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து காவல் துறை இயக்குனர் (மதுவிலக்கு அமலாக்க பணியகம்) மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் துணை ஆணையர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் முதல்வர் அறிவுறுத்தல் படி போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஏடிஜிபி மகேஷ்குமார் ஆலோசனை வழங்கினார்.
ஆய்வு கூட்டத்துக்கு பிறகு ஏடிஜிபி மகேஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அதில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு 28,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். திருநெல்வேலி காவல் சரகம் மற்றும் மாநகரத்தில் மட்டும் போதை பொருள் சம்பந்தமாக கடந்த ஆண்டு 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1324 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் 579 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகம் மற்றும் மாநகரப் பகுதியில் மட்டும் போதை பொருள் விற்பனை தொடர்பாக 119 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்படும் போதை பொருள்கள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அழிக்கப்படும் அதுவரை போதை பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு திருநெல்வேலி சரகத்தில் திருநெல்வேலி மாநகரம் உள்பட ஐந்து இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. தென்மண்டல காவல் சரகத்தில் மட்டும் 935 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது மேலும் கைப்பற்றப்பட்ட 3000 கிலோ கஞ்சா அழிப்பதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 18 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தென் மண்டல சரகத்தில் மட்டும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ளான அசையும், அசையா சொத்துக்கள் போதை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. போதை கடத்தியது சம்பந்தமாக இதுவரை 150 வெளி மாநில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகள் அருகில் போதை பொருள்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் அனைத்து பள்ளிகளிலும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 14000 பள்ளிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 778 குழு அமைத்துள்ளோம் தொடர் நடவடிக்கைகளால் போதை பொருள் சப்ளை குறைந்துள்ளது. ரயில்களில் போதை பொருள் ஏற்றி வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தமிழகத்தில் போதையில்லா தமிழகம் சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்