தூத்துக்குடியில் டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 


தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாக் (Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited) தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள அமோனியா பிளாண்டில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று பிற்பகல் 3 மணிளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் மஞ்சள்நீர்காயல், வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) என்பவர் உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த மேலும் 4 பேர் காயம் தூத்துக்குடியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 




தகவல் அறிந்து ஸ்பிக், மற்றும் டாக் நிறுவன தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்நிலையில், இந்த விபத்தில் பலியான ஹரிஹரன் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 50 ஆண்டுகள் பழமையான இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே பல்வேறு விபத்துக்கள் நடைபெற்றன. ஆனால் முறையாக பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் நிர்வாகம் கையாளவில்லை. இதைத்தொடர்ந்து இன்று எவ்வித அனுபவம் இல்லாத ஒப்பந்த ஊழியரான ஹரிஹரனை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் ஆலை நிர்வாகம் அம்மோனியா வாயு கசிவை சரி செய்ய அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக இறந்துள்ளார் என பலியான ஹரிஹரன் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவரது பலியான சம்பவம் குறித்து முறையாக குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அரசு மருத்துவமனையில் ஹரிஹரன் உடலை ஆலை நிர்வாகம் ஒப்படைத்து சென்றுள்ளதும் கண்டனத்துக்குரியது என்றனர்.




எனவே ஹரிஹரன் மரணத்திற்கு காரணமான ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஹரிஹரன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு வழங்க வேண்டும். மேலும் அவரது வீட்டில் ஒருவருக்கு டேக் தொழிற்சாலையில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் இளம் வயதிலே மகனே பறிகொடுத்து விட்டேனே என அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.  இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.