தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர் போன்ற சில மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ரேக்ளா ரேஸ் என்றழைக்கப்படும் மாட்டு வண்டி போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போட்டியில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிய மாடு, நடுத்தர மாடு, பூஞ்சிட்டு மாடு என பிரித்து போட்டி நடக்கிறது. மாடுகளுக்கு ஏற்ப பந்தய தூரம் நிர்ணயிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட செக்காரக்குடியில் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் மாட்டுவண்டி போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. செக்காரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயம் சிறப்பு பெற்றது. வஉசி நற்பணி மன்றம் நடத்திய பெரிய மாட்டுவண்டி பிரிவு, சிறிய மாட்டுவண்டி பிரிவு, பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவுகள் என போட்டிகள் நடைபெறுவது வழக்கம். செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு 14 கி.மீ. தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 10 கி.மீ. தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 8 கி.மீ. தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்படும்.
விவசாயிகள் தங்களது காளைமாடுகளை மாட்டு வண்டி போட்டிக்காக தயார் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் அன்று மாட்டு வண்டி போட்டிக்கு களம் இறக்குவார்கள். இதற்கென காளை மாடுகளை அதிகாலையில் தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டியும் பின்னர் நீரில் நீச்சல் அடிக்கவைத்தும் அதனை தொடர்ந்து உளுந்து கரைசல் கொடுக்கப்படும் பின்னர் உளுந்து, புண்ணாக்கு, பேரிச்சம் பழம் உணவாக கொடுக்கப்படும். மேலும் தினமும் நாட்டுக்கோழி முட்டையும் மாடுகளின் கால்கள் வலிமையாக இருக்க ஆட்டுக்கால் சூஃப் வழங்கி அதனை தயார் செய்வார்கள் விவசாயிகள். விவசாயம் போதிய அளவில் இல்லை என்ற நிலையிலும் கூட தங்களது காளைகளை உற்சாகமாக தயார் செய்து வருவார்கள். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி மட்டுமல்லாது நெல்லை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறுவார்கள்.
இந்த ஆண்டு ரேக்ளா பந்தயத்திற்கு தங்களது மாடுகளை தயார் செய்ய வேண்டும் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இப்பகுதியில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் விவசாயம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. மாட்டு வண்டி போட்டிக்கு தயாராக இருக்கும் காளைகளும் மாட்டு வண்டிகளும் செக்காரக்குடியில் ஓய்வெடுக்கின்றன