100 நாள் வேலை, ஊதியம் உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம்.ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. விரைவில் மத்தியில் 5, 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும் என நம்புகிறேன் என கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேசினார்.




தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.



தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கம்பட்டி, திட்டங்குளம், நாலாட்டின்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.கோவில்பட்டி தொகுதியில் குலசேகரபுரம், லிங்கம் பட்டி, வடக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கரிசல்குளம், பாண்டவா்மங்கலம், படா்ந்தபுளி, முடுக்கு மீண்டான்பட்டி, நாலாட்டின்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.




அப்போது அவா் பேசியதாவது, பாசிசத்திற்கு எதிரான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. 40க்கு 40 தொகுதிகளை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமை தொகை கிடைக்கும். வேலைவாய்ப்பு, குடிநீா் பிரச்னை உள்ளிட்டவற்றில் தனிக் கவனம் செலுத்தி தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.





மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியம் உயா்த்தப்படும், வேலை நாள்கள் அதிகரிக்கப்படும் என்று தோ்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டதால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால் சரியாக வேலையும், ஊதியமும் கொடுக்க முடியவில்லை. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றாா்.


தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், ராமா், ரமேஷ், செயற்குழு உறுப்பினா் என். ராதாகிருஷ்ணன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா் எஸ் ரமேஷ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.