எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 40 குடியிருப்புகள் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் வரவேற்றார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கி பேசிய கனிமொழி எம்.பி,தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு என்ற முறையில் முதல்வர் செய்து கொடுத்துள்ளார். மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை, அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, தமிழக அரசால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இந்த முகாம்கள் எப்படி நடத்தப்படுகின்றன. இங்குள்ள மக்களுக்கான உரிமை எப்படி வழங்கப்படுகிறது என்பதை உலகத்துக்கே முன்னுதாரனமாக ஐக்கிய நாட்டு சபை பார்த்துக் கொண்டுள்ளது. அங்கு பணியாற்றும் பலரை நான் சந்தித்து பேசும்போது, தமிழ்நாட்டை தான் நாங்கள் முன்னுதாரணமாக காட்டிக் கொண்டிருக்கிறோம் என அவர்கள் சொல்லும்போது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், குடியுரிமை வேண்டுவோர்களுக்கு குடியுரிமை என்று இந்த அடிப்படை விஷயங்களுக்காக தமிழக முதல்வரும், தமிழக அரசும் போராடிக்கொண்டுள்ளது. நிச்சயமாக விரைவில் உங்களுக்கு குடியுரிமை பெற்றுத்தருவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவோம் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்தன் அதனடிப்படையில் உடனடியாக குடியிருப்புகளை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே தாப்பாத்தியில் முதல்கட்டமாக 52 குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார்கள். தற்போது இரண்டாம் கட்டமாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் குளத்துள்வாய்பட்டியில் 40 வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையூரணியில் 60 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அவை திறந்து வைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாறு வீடுகள் மட்டுமின்றி பேவர்பிளாக் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, பொது சுகாதார வளாகம் என்று உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள் என்றார்.
விழாவில், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் ரமேஷ், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆர்.ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றிய திமுக செயலாளர்கள் நவநீத கண்ணன், அன்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.