தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகில் கவர்னகிரி என்னும் கிராமத்தி 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார். வறுமையின் காரணமாக இளமையில் குறும்பும், அறிவு நுட்பமும் துணிச்சலும் சுந்தரலிங்கத்திடம் இருந்தன. அக்காலத்தில் பெரும் வீரர்களாக விளங்கிய பெரிய காலாடி, சின்னக் காலாடி மாடக் குடும்பனார், மொட்டை சங்கரன் காலாடி போன்றவர்களிடம் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், கவரினகிரி தற்காப்புப் படைப்பள்ளிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
சுந்தரலிங்கத்தின் வீரத்தைத் தனது அமைச்சர் தானாதிபதிபிள்ளையின் மூலம் கேள்விப்பட்ட கட்டபொம்மன் அவரைச் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அவரை எல்லைப் பகுதியை கண்காணிக்கப் படையில் சேர்த்துக் கொள்ள விரும்பி வீரன் சுந்தரலிங்கத்தைப் பாஞ்சாலங்குறிச்சி அரசபையின் ஒற்றர் படைத் தளபதியாக அறிவித்தார் கட்டபொம்மன்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் கட்டப்பொம்மனிடம் சமாதானம் பேச அழைத்தார். அப்போது ஜாக்சன் வரி விஷயத்தைக் கிளர வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கு ஏன் தரவேண்டும் கிஸ்தி, வரி என்று வீரமுழக்கமிட்டார். மோதல் ஏற்படவே ஜாக்சன் துரை கட்டப்பொம்மனையும் அவனது ஆட்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். வெள்ளையர்கள் சதித்திட்த்தை அறிந்து ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் வந்து வெள்ளை சிப்பாய்களைக் கொன்று குவித்தார் வீரன் சுந்தரலிங்கம். ஆங்கிலேயருக்கும் பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானத்திற்கும் நேரடிப்போர் நடந்தது. முதல் நாள் போரில் திறமை முழுவதையும் காட்டிப் போரிட்டு வெள்ளைத் தேவன் வீரமரணமடைந்தார். அன்றையப்போரில் விழுப்புண்பட்டு வீழ்ந்த ஊமைத்துரை வீரத்தாய் ஒருவரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீரன் சுந்தரலிங்கம் உயிருக்கு பயந்து எங்கும் தப்பித்து ஓடவில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்பது தான் வீரனின் குறிக்கோளாக இருந்தது. சுந்தரலிங்கத்தை வீழ்த்திவிட்டால் பாஞ்சாலங்குறிச்சி நம் கையில் என்று கும்மாளமிட்டனர்.ஆங்கிலேயர்கள் அவரை நெருங்கப் பயந்தார்கள் தனியொருவனாக இருந்தும் எதிரியிடம் சரணடையாமல் தொடர்ந்த போரிட்டார். வெள்ளையர்களை வெறும் வாளுடன் சமாளிப்பது எப்படி என யோசித்த வீரன் சுந்தரலிங்கம் பீரங்கிக் குண்டுகளுக்குப் பயன்படுத்தும் வெடிமருந்தக்கிடங்கை அழித்துவிட்டால் ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்கிவிடலாம் எனக் கணித்தார். அவரின் முறைப்பெண் வடிவு நினைவுக்கு வர அவள் உதவியுடன் வெடிமருந்து கிடங்கை அழிக்கத் திட்டமிட்டு ஆட்டு மந்மையை ஆவாரங்காடு வழியாக ஓட்டி வந்து கிடங்கிற்கு முன் நிறுத்திவிடச் சொன்னார்.
வீரன் சுந்தரலிங்கம் நுழைவாயிலில் எரிந்து கொண்டிருந்த திப்பந்தத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். இதைப்பார்த்த வெள்ளையச் சிப்பாய்கள் மிரண்டார்கள். வடிவு வெள்ளைகாரச் சிப்பாயைத் தாக்கிவிட்டு வீரன் சுந்தரலிங்கத்திடம் ஓடினாள்.பாஞ்சாலங்குறிச்சியைக் காப்பாற்றுவது ஒன்றையே மனதில் கொண்ட வீரன் வெடிமருந்து கிடங்கை ஒரு முறைப்பார்வையிட்டான். அடுத்த நொடியே வெடிமருந்து பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறின. அக்னி ஜூவாலையின் வெம்மைத்தாங்காமல் நூற்றுக்கணக்கானச் சிப்பாய்கள் உடல் கருகி செத்தனர். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என் உடல் பொருள் ஆவியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று முழக்கமிட்டபடி மாவீரன் தன் மாமன் மகள் வடிவுடன் வீரமரணம் அடைந்தான். ஆங்கிலேயப் படைகளால் வெல்ல முடியாத அந்த மாவீரனின் உயிர் விடுதலைக்கான வேள்வியில் வெடிமருந்து கிடங்கில் அடங்கியது. 08.09.1799 அன்று வீரமரணம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் அமைக்கப்பட்டு உள்ள மணிமண்டபத்தில் மார்பளவு திருவுருவ சிலைக்கு மாற்றாக முழு உருவ வெண்கல சிலை அமைக்கவேண்டும். மேலும் வீரன் சுந்தரலிங்கனாருக்கு மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை விடுக்கின்றனர் வீரன் சுந்தரலிங்கனாரின் வாரிசுகள்.