தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டையபுரம், கழுகுமலை, விளாத்திகுளம், புதூர் போன்ற பல்வேறு ஊர்களில் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விளை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. அதே போல் புதூர் வட்டார விவசாயிகளின் நலன் கருதி சுமார் ரூபாய் ஆறுகோடியே இருபத்து ஐந்துஇலட்சம் செலவில் 5000 மெட்ரிக் டன் கொண்ட விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டுக்காக 21.06.2019 அன்று திறக்கப்பட்டது.




புதூர் வட்டாரத்தில் சுமார் 44 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி வானம் பார்த்த பூமியாகும். ஆண்டுக்கொரு முறை மட்டுமே விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி நிலங்கள் ஆகும். இங்கு பிரதானமாக உளுந்து பாசி,வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கம்பு, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், பருத்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நிலங்கள் கரிசல், பொட்டல், வெள்ளைத்தரை, மண் கண்டம், மணல்ச்சாரி என ஐவகைகளாக உள்ளன. பெரும்பாலும் புரட்டாசி பட்டத்தை முன்னிட்டு பயிரிடப்படுகிறது. இங்குள்ள நிலங்களுக்கு மழைக்காலத்தில் விதைகள் முளைக்க, வளர, மணிப்பிடிக்க என மூன்று மழை போதுமானதாகும்.




தொடர்மழை, கனமழை பெய்தால் மகசூல் பெரும் நஸ்டம் ஏற்படும். இந்நிலையில் இந்தாண்டு புரட்டாசி மாதம் விதைப்பு செய்யப்பட்டு ஐப்பசி மாத பிற்பகுதியில் தொடங்கிய மழை விடாது பெய்ததன் விளைவு பயிர்கள் எல்லாம் அழுகிப் போயின. நம்பிக்கை தளராமல் மீண்டும் விதைப்பு செய்தனர். டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த மழைக்கு மீண்டும் பெருமளவு சேதமடைந்துவிட்டது. கடந்த காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை வீடுகளில் இருப்பு வைக்க இடமில்லாமல் களத்து மேட்டில் உடனுக்குடன் வியாபாரிகளுக்கு விற்று வந்தனர். ஆண்டு முழுவதும் உழைத்து வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் அதனுடைய இலாபத்தின் முழுப்பலனை விவசாயிகள் அனுபவிக்க முடியாமல் வியாபாரிகள் அனுபவித்தனர். இதனை கருத்தில் கொண்டு உழைக்கும் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து சந்தையில் கூடுதல் இலாபம் அடைய வேண்டும் என்ற பரந்த நோக்கில் புதூரில் சேமிப்பு கிடங்கு அரசு கட்டியது. இச்சேமிப்பு கிடங்கில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மூட்டைகள் வரை இருப்பு வைக்கலாம்.




இதனை சுற்றுவட்டார விவசாயிகள் முழுவதுமாக இருப்பு வைத்து சந்தையில் நல்லவிலைக்கு விற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் சேமிப்பு கிடங்கு தானிய மூட்டைகளால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடுமையான மழையால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு தானிய மூட்டைகளின்றி பெயரளவு மூட்டைகளுடன் காட்சியளிக்கிறது.மார்கழி, தை மாத மழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. தை மாதம் மழை பெய்தால் தவிட்டுக்கு கூட மகசூல் உதவாது என அக்கால விவசாயிகள் கூறுவர்.பெரும்பாலான நிலங்களில் விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். ஒரு சில விவசாயிகள் சம்பிரதாயத்திற்கு அறுவடை செய்தனர். அறுவடை செய்யப்பட்ட மகசூல் கூலிக்கு கூட வரவில்லை. இதனால் விவசாயிகள் மனமுடைந்து நஸ்டமடைந்து,தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விவசாயிகளிடம் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பயிரிடப்பட்ட நிலப்பரப்பு, பயிர் விபரம், வங்கி புத்தக நல், ஆதார் நகல் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து சுமார் 40 நாட்களுக்கு மேலாகிறது. தவிர நடப்பாண்டு பயிர் காப்பீடு மழை பாதிப்பை பேரிடராக கருதி ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்கிறார் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன்