தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உப்பாற்று நீரோட்டத்தின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது. இங்கு வழிபட கூடிய பக்தர்கள் படகில் ஏறிச்சென்று உப்பாற்றை கடந்து அந்த கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் இந்த புன்னைகாயல் புனித தோமையார் ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் சென்று வருவது வழக்கம்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம், பகுதிகளில் இருந்து பலர் இந்த ஆலயத்திற்கு வந்துள்ளனர். அங்கு அப்போது குளிப்பதற்காகவும், சிப்பிகளை சேகரிப்பதற்காகவும் சிலர் உப்பாற்றில் இறங்கியபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளனர். உதவிக்கு அங்கு யாரும் இல்லாத நிலையில் அங்கு என்ஜின் பொருத்திய ஃபைபர் படகில் தற்செயலாக வந்த புன்னைக்காயலை சேர்ந்த மீனவர் ஜேமன் என்பவர் பார்த்துள்ளார் உடனே அவர் தனது ஃபைபர் படகில் தனி ஒரு ஆளாக விரைந்து சென்றார். நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய 9 பெண்களையும் அடுத்தடுத்து மீட்டு தனது ஃபைபர் படகில் தூக்கிபோட்டு மீட்டு உள்ளார். பின்னர் அவர்களை கரைக்கு கொண்டு வந்து புன்னைக்காயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்து அனைவரது உயிரையும் காப்பாற்றி உள்ளார்.




உரிய சிகிச்சைக்கு பின்னர் 9 பேரும் நலமுடன் வீடு திரும்பினர். தனி ஒருவனாக நின்று தன் உயிரைக் பணயம் வைத்து 9 பேரையும் மீட்டு கரை சேர்த்த மீனவர் ஜேமனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த சேவையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் கவுரவிக்க வேண்டும் என்று புன்னைக்காயல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீட்கப்பட்ட பெண்கள், மீனவர் ஜேமன் செய்த உதவிக்கு பிரதபலனாக பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை தோமையார் கோயிலின் உண்டியலில் போடுங்கள்; எனக்கு வேண்டாம். நான் செய்த உதவியை பணத்தை தந்து அதை கொச்சை படுத்தி விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.




இதுகுறித்து மீனவர் ஜேமன் கேட்டபோது, முதலில் கரையில் நின்ற மக்கள் சத்தம் சத்தம் கொடுத்தனர். அண்ணே காப்பாத்துங்க காப்பாத்துங்க என தொடர்ந்து குரல் கொடுக்க இதை கவனித்த எனது மகள் அப்பா காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று சத்தம் கொடுக்குறாங்க அப்படின்னு சொல்லவே தொடர்ந்து தனித்தனியாக கடல்ல தத்தளித்த மக்களை ஒவ்வொருத்தரையா நான் தூக்கி காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து புன்னகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தகாக கூறினார்.