திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாசன் நகரில் வசித்து வருபவர் 42 வயதான பிரபாகரன். மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து வரும் இவர் காலை, மாலை என இருவேளை சுக்கு காபி விற்று மாதம் 45 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார். ஐ.டி.ஐ முடித்து விட்டு துபாயில் உள்ள ஒரு தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் 15 வருடங்கள் பணி புரிந்த பிரபாகரன் திருவாரூருக்கு திரும்பி வந்தவுடன் ஒரு தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வந்த இவர் குடும்பத்தை சிரமப்பட்டு நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பெருத்தொற்று ஊரடங்கு காலம் வந்ததால் அந்த வேலையும் இல்லாத சூழலில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.





இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாய்பாபா கோவிலில் தயாரித்துக் கொடுக்கப்படும் சுக்கு காபியினை தேரடி வீதியில் நின்று இலவசமாக பொதுமக்களுக்கு வினியோகித்து வரும் வேலையை ஒரு வருடமாக செய்து வந்திருக்கிறார். பிரபாகரன் வாழ்வாதாரம் இழந்து தனது குடும்பம் தவித்து வரும் நிலையில் நாம் இந்த சுக்கு காபியை விற்பனை செய்தால் என்ன என்கிற சிந்தனை அவருக்கு ஏற்பட்ட உடன் அதை நடைமுறையில் செயல்படுத்தியும் உள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 50 காபி விற்பதே கடினமான ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இயற்கையான முறையில் விறகு அடுப்பில் மூன்று மணி நேரம் கொதிக்கவைத்து இஞ்சி சுக்கு மிளகு திரிகடுகம் கருப்பட்டி போன்றவற்றை வைத்து சுக்கு காபி தயாரித்து விற்பனை செய்துள்ளார். ஒரு சுக்கு காபி பத்து ரூபாய்க்கு மட்டுமே அவர் விற்பனை செய்வதால் கருப்பட்டி வாங்கி கட்டுப்படியாகாததால் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது நாளொன்றுக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை சம்பாதிக்கும் அளவுக்கு அவரது தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக தொடங்கிய இந்த தொழிலை தற்போது முழு நேரமாக செய்து வருகிறார். சைக்கிளில் சென்று விற்பனை செய்து வந்த அவர் தற்போது எலக்ட்ரிக் பைக் ஒன்றினை வாங்கி அதில் பிளாஸ்களில் சுக்கு காபியை நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார். மேலும் வண்டியில் உள்ள ஒலிபெருக்கியில் அவரது குரலில் சுக்கு காபியின் நன்மைகள் குறித்த ஆடியோ பதிவையும் அதில் ஒலிக்கச் செய்கிறார். அவருக்கு என்று ஒரு தனி வாடிக்கையாளர் வட்டத்தை தற்போது அவர் உருவாக்கி வைத்துள்ளார். காவல் நிலையம், மருந்தகங்கள், சிறு குது நிறுவனங்கள் கல்லூரி  மாணவ, மாணவிகள் என அனைவரும் தற்போது அவரது சுக்கு காபியை விரும்பி வாங்கி அருந்தி வருகின்றனர்.





அவருக்கு  உறுதுணையாக இவரது மனைவி ஜெயலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் ரட்சனா, ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் லெஷ்மி ஈஸ்வரன் 70 வயதான தாய் சந்திரா ஆகியோர் இருந்து வருகின்றனர். பிரபாகரன் சீசனுக்கு தகுந்த மாதிரி கேழ்வரகு கஞ்சி கோதுமை பால் பருத்திப்பால் மோர் முதலியவற்றையும் விற்பனை செய்து வருகிறார். அனைத்தையும் இயற்கை முறையில் வீட்டில் இருந்து தயாரித்து அவர் எடுத்துச் செல்வது தனிச்சிறப்பு. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்காக சுக்கு காபி விற்பனையை பிரபாகரன் கையிலெடுத்த போது அவரது தாய் உள்ளிட்ட குடும்பத்தினர் இதனை கவுரவ குறைச்சலாக கருதி வேண்டாம் என்று கூறியுள்ளனர். இருப்பினும் பிரபாகரன் ஒருவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதைவிட சுயதொழில் மேலானது என்று கூறி தொடர்ந்து இதனை செய்து தற்போது அதில் சாதித்தும் காட்டியிருக்கிறார். மேலும் பிரபாகரன் சொந்தக்காலில் நிற்பது என்பது எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்பதனை நிரூபித்துக் காட்டிய வாழும் ஆதாரமாக உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தன்னைப்போல பிறரும் சுய தொழில் செய்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதை உறுதியாக மற்றவர்களுக்கும் அவர் அறிவுறுத்தி வருகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண