தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் இன்று ஒரு நாள் முழுவதும் உணவகத்தில் இலவசமாக பொது மக்களுக்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.

 

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் பொது மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் புலிவலம் பகுதியில் உள்ள திமுக ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கார்த்தி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை ஒன்றிய செயலாளர் தேவா தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து 69 கிலோ எடையுள்ள உதயசூரியன் அச்சிடப்பட்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் புலிவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன அதுமட்டுமின்றி கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



இதேபோன்று கூத்தாநல்லூர் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோன்று திருவாரூர் நகர் பகுதியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.