நாளை விடுமுறை அளிக்க தவறினால் நடவடிக்கை: தொழிலாளர் ஆணையம்
தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்கென அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிலர், நேற்று முதலே தங்களின் வாக்குகளை செலுத்த சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. 94872 69270, 94425 40984, 86103 08192, 94446 47125 ஆகிய எண்களில் தொழிலாளர்கள் புகார் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.