திருவாரூர் அருகே உடன் பிறந்த சகோதரியின் திருமணத்திற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுவனை சைல்டு லைன் நிர்வாகிகள் மீட்டனர்.

 

திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளைந்து களைத்த நிலங்களை வளமாக்க செம்மறி ஆடுகளின் கழிவை உரமாக்குவார்கள். இதற்காக புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு விளைநிலங்களில் களம் இறக்கப்பட்டு விளைநிலங்களுக்கு உரதேவை அளிக்கப்படுகிறது . இதில் கொரடாச்சேரி அருகே காவனூர் பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஒருகுழுவினர் செம்மறி ஆடுகளுடன் வந்து விவசாய நிலத்தில் ஆடுகளை களமிறக்கி அருகில் தங்கியுள்ளனர். இக்குழுவில் சிறுவர்கள் சிலர்  ஆடு மேய்க்க கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளதாக திருவாரூர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், கொடுத்த தகவலின் பேரில் ஆர்ஐ பால்ராஜ், காவனூர் விஏஓ அனுராதா மற்றும் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.



இதில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த  வீரபாண்டியன் மகன் விஸ்வநாதன்(15) கொத்தடிமையாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில்,  வீரபாண்டியன்  மூத்த மகள் திருமண செலவிற்காக, வீரராகவன் என்பவர் வாயிலாக சிவகங்கை  இளையான்குடி ராசு, அவரது மகன் முத்துக்குமார் ஆகியோரிடம் கொத்தடிமையாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதற்காக கடந்த  ஜனவரி மாதம் ரூ. 1 லட்சம் பணமும் கைமாறியுள்ளது. இதையடுத்து கடந்த 7 மாதமாக விஸ்வநாதன் கொத்தடிமையாக உள்ளது தொடர்பாக விஏஓ கொடுத்த  புகாரின்பேரில் இளையான்குடி ராசு, அவரது மகன் முத்துக்குமார், கடலூர் மணக்கொள்ளை  வீரராகவன், சிறுவன் விஸ்வநாதனின் தந்தை வீரபாண்டியன், தாய் சின்னப்பொண்ணு ஆகிய 5 பேர் மீதும் கொரடாச்சேரி போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



இதையடுத்து சிறுவன் விஸ்வநாதன் அங்கிருந்து மீட்கப்பட்டு மன்னார்குடி ஆர்டிஓ  அழகிரிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட ஆர்டிஓ  கொத்தடிமையாக இருக்க  வழங்கப்பட்ட லட்ச ரூபாய் கடனையும் ரத்து செய்து உத்தரவிட்டதோடு விஸ்வநாதனை  கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். அதனை அடுத்து சிறுவர் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுவனை தங்க வைத்தனர். இதேபோன்று பல இடங்களில் செம்மறி ஆடுகள் மேய்ப்பதற்கு குடும்பச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பல நபர்கள் சிறுவர்களை அழைத்து வந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில நபர்கள் இதே போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.