கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லுார், வேட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் பிரபாகரன் (24). ஆட்டோ டிரைவர். காமாட்சிபுரம், மேலமரத்துறையைசேர்ந்தவர் மணிகண்டன் (52). வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய 17 வயதுடைய மகள் பந்தநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆவது படித்து வருகிறார். பிரபாகரனும், மணிகண்டனின் மகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது மகளை காதலிப்பதை கைவிடுமாறு, பிரபாகரனிடம், மணிகண்டன் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் கூறியுள்ளார். ஆனால் பிரபாகரன், தொடர்ந்து மணிகண்டன் மகளை காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஊரில் கெட்ட பெயர் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (22) என்பவரிடம், பிரபாகரனை மது அருந்தலாம் என ஏமாற்றி எப்படியாவது அழைத்து வா என்று மணிகண்டன் கூறினார். மதுவிற்கு ஆசைப்பட்ட கார்த்தியும், பிரபாகரனை அழைத்து கொண்டு , காமாட்சிபுரம் கடைத்தெரு, கோணங்கிபள்ளம் பிரிவு சாலைக்கு அழைத்து வந்தார். அங்கு நின்றிருந்த மணிகண்டன், தனது மகளை காதலிப்பதை கைவிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பிரபாகரனை சரமாறியாக குத்தினார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவரும், பிரபாகரனின் உறவினருமான தயாநிதி (17) தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தயாநிதியை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் இறந்தார். தயாநிதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பந்தநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டன், கார்த்தி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இரு சமூகத்தினருக்கு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு பிரபாகரன் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிதியை உடன் வழங்கிக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிக் கோரியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி,விசிக,திக, நீலப் புலிகள் இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்,
பிரபாகரன், மணிகண்டனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். மணிகன்டன் மகளை, பிரபாகரன், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் ஊருக்குள் மிகுந்த அவமானப்பட்டு வாழ்ந்து வந்துள்ளார். தனது மகளை காதலிக்கூடாது என மணிகண்டன் பல முறை பிரபாகரனை, எச்சரித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மணிகண்டன், பிரபாகரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரபாகரன், உனது மகளை துாக்கி கொண்டு செல்வேன், உன்னால் முடிந்தால், எதுவேண்டுமானால் செய்து பார் என அனைவரது முன்பு சவால் விட்டுள்ளார். இதனால் மணிகண்டன் மேலும் அவமானப்பட்டார். இதனால் ஆத்திரத்திலிருந்த மணிகண்டன், பிரபாகரனின் நண்பரான கார்த்தியை விட்டு, அழைத்து வரச்சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மீண்டும், பிரபாகரன், சவால் விட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த, மணிகண்டன், தன் முன்னாலேயே, தனது மகளை துாக்கி செல்வேன் என்று கூறியதையடுத்து, கத்தியால் சரமாறியாக குத்தி கொலை செய்துள்ளார் என்றார்.