தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி தஞ்சாவூர் இளைஞரை அமெரிக்க பெண் திருமணம் செய்து கொண்டு அனைவரையும் ஆச்சரிய கடலில் மூழ்கடித்துள்ளார்.



இன்னிசையாக இதயத்துடிப்பும், உனை காணும் போதெல்லாம்... மெல்லிசையாய் கீதம் பாடுகிறது மனக்கதவு என்று பேசுவதெல்லாம் கவிதை. சொல்வதெல்லாம் கவிதை என்று இதயத்தை வருடும் காதலுக்கு மொழியா, அழகா எதுவும் தேவையில்லை. உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஓர் மந்திர சக்தி காதல்.

அந்த காலம் முதல் இனி வரும் காலம் வரை காதல் கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாகப் பாடியிருக்கிறார்கள்; வர்ணித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அற்புத சுவையாக மனதை அள்ளும். காதல் கனவுகளிலும், நினைவுகளிலும் மனதை மயக்கும்.





காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானதுதான். கோழையை வீரனாக்கும். வீராதி வீரனையும் சாதுவாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம். எனினும் காதல் அற்புதமானது. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதுதான் நிதர்சனம். அதனால்தான் காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, ‘காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று பாடினார். காவியங்களும் காதலைப் பற்றி சுவைபடப் பேசுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுகள் இருக்கின்றன. கொஞ்சி குலாவும் கிளிகளும், குருவிகளும் கண்டுள்ளோம். மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், அவனுடைய பேச்சில் நடை, உடை, பாவனையில் மெருகேறி விடுகின்றது. தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வேகம் பிறக்கிறது. புதிய உற்சாகமும் உத்வேகமும் வாழ்க்கையை விறுவிறுப்பாக்கி விடும் என்பதும் உண்மைதானே.





தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது எனது உள்ளம். கவிதையெழுத சிந்தித்தால் சிந்தைக்குள் நீதான் வார்த்தைகளாக வந்து நிற்கிறாய். இளைப்பாற இடம் கேட்டேன் உன்னிடம்... இதயத்தில் இணைந்து வாழும் வரம் கொடுத்தாயே என்று கவிதை மொழியால் காதல் பேசும் காலம் இது. இதை உணர்த்தும் விதமாக தஞ்சையில் ஒரு அற்புத நிகழ்வு நடந்துள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த எஸ். சங்கரநாராயணன் (35 ) பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவரும், எம்.ஏ. சைக்காலஜி படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான அன்னி டிக்சன் (35) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதல் என்று வந்துவிட்டால் வெளிநாடாவது, உள் நாடாவது. அங்கு மனங்கள் மோதி காதல் போர் அல்லவா உருவாகிறது.

இக்காதலை இரு தரப்பு பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதன்படி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் திருமணம் வாழ்த்து கோஷங்கள் மத்தியில் அட்சதை மழை பொழிய அன்பு மனங்கள் இணைய நடந்தது.

தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மந்திரங்கள் தமிழில் ஓதப்பட்டது. மேலும் மணமகன் சங்கரநாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இவ்விழாவில் சங்கரநாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ்ப் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து நம் பாரம்பரியத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த காதல் ஜோடிகள் திருமண தம்பதிகளாக அனைவரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.