தஞ்சாவூர்: நகர்ப்புற பகுதிகளில் உழவர் அங்காடிகள் அமைக்கப்படும். அரசுப்பள்ளிகள் அனைத்திற்கும் ஸ்மார்ட் போர்டு வசதி செய்து தரப்படும் என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 44,46 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மருத்துவக் கல்லூரி பகுதியில் ஒவ்வொரு நகர், தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேளதாளம் முழங்க வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சூழ வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். வாக்குகள் கேட்டு திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் செல்லும் பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதியவர்கள் அவரை ஆரத்தழுவி நீங்கள்தான் தஞ்சை எம்எல்ஏ என்று உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
முன்னதாக தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் தேர்தல் பணிமனையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த 50க்கும் அதிகமான இளைஞர்கள் வேட்பாளர் சண்.ராமநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் ஒவ்வொருவருக்கும் கருப்பு சிவப்பு துண்டை அணிவித்து வரவேற்றார். பின்னர் மாலை கரந்தை தமிழ்ச்சங்கம் பகுதியிலிருந்து பிரச்சாரத்தை வேட்பாளர் சண்.ராமநாதன் தொடங்கினார். 5,6,7,8 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சை மாநகராட்சி செம்மொழி பூங்கா அமைக்கப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். கல்லணையில் காவேரி வெண்ணாறு புது ஆறு இணைக்கும் இடத்தில் புதிய பாலம் அமைக்கப்படும். அரசுப்பள்ளிகள் அனைத்திற்கும் ஸ்மார்ட் போர்டு வசதி செய்து தரப்படும். சுய உதவி குழு பெண்களுக்கு முதலீட்டுடன் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை பிணை எதுவுமின்றி மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உயர்த்த உணவு பதப்படுத்தலுக்கான திறன் பயிற்சி வழங்கப்படும். உழவர் சந்தைகள்' வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், உழவர் அங்காடிகள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யவும், “எண்ணும் எழுத்தும்” திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த இப்பள்ளிகள் தளமாக விளங்குகின்றன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளிடம் மறைந்திருக்கும் கலை உணர்வுகளை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
2022-2023 ஆம் ஆண்டில் போட்டிகள் நடத்தப்பட்டு, 2024–25 ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பள்ளிகளில் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களின் ஆய்வுத் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab) போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தியை விளக்கி கூறி வாக்குகள் சேகரித்தார்.
