தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு சட்ட விரோதமாக பார்சல் வந்துள்ளதாக மிரட்டி ரூ.10.60 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா (42). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது வாட்ஸ் அப் செயலிக்கு கடந்த 19.1.2026ம் தேதி அன்று ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை விமான நிலைய அதிகாரி என்று தெரிவித்த அந்த மர்மநபர் 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள மற்றும் அமெரிக்க டாலர்களைக் கொண்ட சட்டவிரோத பார்சல் ஒன்று உங்கள் பெயருக்கு வந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். அதற்கு சஞ்சனா தனக்கு எவ்வித பார்சலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பணமோசடி தடுப்புச் சான்றிதழ் கட்டணம்

இருப்பினும் அந்த மர்மநபர் மிரட்டும் தொனியில் உங்கள் பெயருக்குதான் பார்சல் வந்துள்ளது. அதற்குரிய எடைக்கான அபராதம் மற்றும் பணமோசடி தடுப்புச் சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை நீங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த சஞ்சனா, அந்த மர்மநபர் கூறிய வங்கிக்கணக்குகளில் 4 தவணைகளாக மொத்தம் ரூ. 10,60,000/- தொகையை இணையவழிப் பரிவர்த்தனை மூலம் கடந்த 4.2.26 வரை செலுத்தியுள்ளார். 

பின்னர் சஞ்சனா பலமுறை அந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மர்மநபர் தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து தன்னை அந்த மர்மநபர் ஏமாற்றியதை உணர்ந்த சஞ்சனா கடந்த 8ம் தேதி தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் சஞ்சனா பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவை என்று தெரிய வந்தது. தொடர்ந்து சஞ்சனாவை ஏமாற்றி பணம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவு: வாலிபருக்கு சிறை

பேஸ்புக்கில் பெண்ணின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து பதிவிட்ட வாலிபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் திருச்சி உறையூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, இவருடன் பணியாற்றி வந்த திருச்சி காட்டூரைச் சேர்ந்த அருண்குமார் (28) அப்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து கடந்த 2022, ஜூன் 17 ஆம் தேதி பதிவிட்டார்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.டி. கனிமொழி விசாரித்து அருண்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.