இட பிரச்சனையால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்... மாவட்ட ஆட்சியர் முன்பு கதறி அழுது மனு அளித்த பெண்.. உடனடியாக உத்தரவு போட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஓவரூர் வெள்ளகுளத்து தெருவை சேர்ந்த ராணி இவரது மகள் மாரியம்மாள் வயது 38 கடந்த 13 வருடங்களுக்கு முன்பு சுதாகர் என்பவரோடு காதல் திருமணம் செய்து ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மாரியம்மாள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தாயார் ராணி ஆகியோரும் அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அட்டூழியம்
ராணியின் மகனுக்கும் மாரியம்மாளுக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர் கிராம பஞ்சாயத்தார்கள் ஒரு பட்சமாக மாரியம்மாள் சகோதரருக்கு மட்டும் பேசி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிராம பஞ்சாயத்தார்கள் பன்னீர்செல்வம் செல்லதுரை கௌதமன் மன்மதராஜ் வேதையன் ஆகியோர் ராணி மற்றும் மாரியம்மாள் குடும்பதினரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் யாரும் இந்த குடும்பத்தினரிடம் பேசக்கூடாது. குடிநீர் எடுக்க கூடாது, திருவிழா,திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்கள். மேலும் மாரியம்மாள் குழந்தைகள் பள்ளியில் இருக்கும் நேரத்தில் கூட யாரும் பேசக்கூடாது என கூறியிருந்தனர்.
பட்டா தரமுடியாது என்ற ஊராட்சி
இந்த நிலையில் அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டகையில் வாழ்ந்து வருவதால் அந்த இடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் என இருந்த நிலையில் அந்த இடத்திற்கு பட்டா வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாரியம்மாள் கேட்டுள்ளார் அப்போது உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் பட்டா கொடுப்பதற்கு கையெழுத்து இட முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 28ஆம் தேதி அந்த கிராமத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் அந்த இறுதி நிகழ்ச்சிக்கு மாரியம்மாள் சென்றுள்ளார் அப்போது உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் நீங்கள் இங்கே வரக்கூடாது என கிராம பஞ்சாயத்தார்கள் சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து மாரியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மாரியம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் முன்பு கிராம முக்கியஸ்தர்கள் இந்த ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுது மனு அளித்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென உத்தரவிட்டார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர். ஊரை விட்டு ஒதுக்கிய காரணத்தினால் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.