தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் 11 வகையான உளுந்து, 9 வகையான பயிறு சாகுபடி செய்த விவசாயி நிலத்தில், வேளாண்மைத்துறையினர் வயல் தின விழா நடத்தி, பிற விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். 

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் விவசாயி ஆர்.சரவணன் ஆனந்தன் என்பவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் சந்தனம், செம்மரம், மகாகனி, தென்னை ஆகிய மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இதில் ஊடுபயிராக உளுந்து, பயிறு வகைகளை தற்போது சாகுபடி செய்துள்ளார்.

டெல்டா மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வெகுவாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வேளாண்மை துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை சார்பில் கான்பூரில் உள்ள இந்திய பயறு ஆராய்ச்சி நிலையம் வாயிலாக வெளி மாநிலங்களிலிருந்து சான்று பெற்ற 20 வகையான  உளுந்து, பயறு வகைகளின் விதைகள் வாங்கி தரப்பட்டது.

இதையடுத்து விவசாயி சரவணன் ஆனந்தன் வயலில் ஊடுபயிராக கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் அதிக மகசூல் தரக்கூடிய எல்பிஜி 913, கேபியு 405, என்விஎல் 7, டி 9, எஸ்விஎம் 66, எல்ஜிஜி 600, எம்எச் 1762, டிசிஏடிஎம் 1, பியூஎஸ்ஏஎம் 9531, கோட்டா 5 உள்ளிட்ட ரகங்களை கொண்ட உளுந்து, பயிறு வகைகளை சாகுபடி செய்தார். இந்த பயிர்கள் அனைத்தும் கடந்த 30.4.2025 ல் விதை ஊன்றப்பட்டு, தற்போது காய்கள் காய்த்துள்ளது.

தொடர்ந்து வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை சார்பில் சரவணன் ஆனந்தன் வயலில் வயல் தின விழா கொண்டாப்பட்டது. அப்போது வேளாண் துறையினர், விதை உற்பத்தியாளர்கள், முன்னோடி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உளுந்து, பயிறு சாகுபடி முறைகள் குறித்து உதவி இயக்குநர் து.கோபாலகிருஷ்ணன் விளக்கமளித்தார். பின்னர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா கூறுகையில், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய பயிராகவும், குறைந்த அளவு சத்துகள் கொண்ட நிலங்களில் நன்கு வளர்ந்து, மகசூல் தரக்கூடியதாக உளுந்து, பயறு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 86,500 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயினால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வந்தனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் மத்திய அரசால் அறிவிக்க செய்யப்பட்ட ரகங்களை வெளிமாநிலங்களிருந்து கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக தஞ்சாவூர் கோட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் பைங்கால், கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் ஆகிய மூன்று இடங்களிலும் இந்த மாதிரி சாகுபடி திடல் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் விவசாயி சரவணன் ஆனந்தன் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 11 வகையான உளுந்து, 9 வகையான பயறு வகைகள் நன்றாக வளர்ந்துள்ளது.

இந்த உளுந்து, பயறு அனைத்தும் 60 லிருந்து 70 நாள் வயதுடையது. வாரம் ஒரு முறை நீர்பாசனம், களைக்கொல்லி மேற்கொண்டும், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தியும், மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 சித்திரை பட்டத்தில் இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைத்துறையினர் செய்துள்ளனர் என்றார்.

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் மணிமாறன், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை பல்கலைக் கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மதிராஜன், விதை ஆய்வு துணை இயக்குநர் வி.சுஜாதா, வேளாண்மை வணிக பிரிவின் துணை இயக்குநர் ரா.சுதா, விதைசான்று அலுவலர்கள் க.பிரபு, எஸ்.ஹசீனாபேகம் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.