தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் நான்கு முனை போட்டி ஏற்பட்டது. இந்த போட்டிகளில் 94 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 1,222 இடங்களில் இருந்த 2,496 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் காலை முதலே வாக்களித்தனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு இருந்தது.. தஞ்சாவூர் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 360 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திருவையாறு தொகுதியில் 338 வாக்குச்சாவடிகளில் 405 இயந்திரங்கள், ஒரத்தநாடு தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளில் 376 இயந்திரங்கள், பட்டுக்கோட்டை தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளில் 372 இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன..

அதேபோல், பேராவூரணி தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் 340 இயந்திரங்கள், கும்பகோணம் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளில் 360 இயந்திரங்கள், திருவிடைமருதூர் தொகுதியில் 326 வாக்குச்சாவடிகளில் 391 இயந்திரங்கள், பாபநாசம் தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளில் 378 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன. 

ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலாக 20 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பாக வைக்கப்பட்டன. மொத்தமாக, மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளில் 2,496 வாக்குச்சாவடிகளில் 2,992 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், 3,242 ஒப்புகை சீட்டை காட்டும் (VVPAT) இயந்திரங்களும் பயன்பாட்டில் வைக்கப்பட்டன. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் காலையிலேயே முதியவர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் சற்று தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்ளே வாக்காளர்கள் எடுத்து வந்த  செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. அவற்றை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் வாங்கி வைத்துக் கொண்டனர். வாக்காளர்கள் வாக்களித்து வந்ததும் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் குந்தவைநாச்சியார் கல்லூரியில் உள்ள 172 வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் வாக்களிக்கச் சென்றார். அப்போது காலை 7.40 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதுகுறித்து கலெக்டர் தேர்தல் அலுவலர்களிடம் விசாரித்த போது, இயந்திரம் பழுதாகியுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக இயந்திரம் சீரமைக்கப்பட்டு காலதாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

எப்போதும் இல்லாத வகையில் காலை 11 மணி அளவிலேயே எட்டு தொகுதிகளிலும் 35 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது, இதே போல் மாவட்டத்தில் பூதலூர், நந்தவனப்பட்டி, ஆற்காடு, ராயமுண்டான்பட்டி, வேங்கராயன்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிறு சிறு பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கியது.  இன்று வெயில் அதிகமாக இருந்ததால் காலை முதலே வாக்காளர்கள் முக்கியமாக முதியவர்கள் அதிகளவில் வந்து வாக்களித்துச் சென்றனர்.