தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஒரத்தநாடு அருகே வேதபுரி வடிகால் வாய்க்காலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் நாற்று நடவு செய்து ஒரு மாதமே ஆன இளம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நாற்று நடவு செய்த இளம் சம்பா தாளடி பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தில் உள்ள வேதபுரி வடிகால் வாய்க்காலில் அதிக அளவிலான மழைநீர் செல்வதால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பு காரணமாக மழைநீர் முழுவதும் அருகில் இருக்கும் விளைநிலங்களில் புகுந்துள்ளது. இதனால் அங்கு நடவு செய்து ஒரு மாதமே ஆன இளம் சம்பா. தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் 3 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கியுள்ளன. நடவு, உரம் என ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து கதிர் வரும் நிலையில், இந்த மழையால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

இந்த வாய்க்காலை தூர்வாரக் கூறி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் உப்புண்டார்பட்டி, தெக்கூர், கரிக்காடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் தாளடி நெல் பயிர்கள் மழைநீர் புகுந்ததால் நீரில் மூழ்கியுள்ளது. நாட்டு வாய்க்காலில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரையால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தாலுக்காவிற்கு உட்பட்ட உப்புண்டார்பட்டி, தெக்கூர், கரிக்காடிப்பட்டி, பின்னையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நடவு செய்து 30 நாட்கள் ஆன வயல்களில் உரங்கள் தெளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் பெய்த மழையில் தண்ணீரில் கரைந்து விட்டதாக வேதனையுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

நாட்டு வாய்க்கால் 4 ஆண்டுகளாக தூர்வாராத காரணத்தால் வெங்காய தாமரை செடிகள் புதர்போல் மண்டி இருப்பதால் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.