தஞ்சாவூர்: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர மரியாதை செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement


திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.




இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.   கோயில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.


விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன. மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.


இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோயில் கி.பி 1320 முதல் 1370 வரையிலான காலகட்டங்களில் முஸ்லிம் படையெடுப்பின் போது சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.


பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டுபுடவைகள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. 


இதை திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் எடுத்துவந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை பட்டாச்சார்யார் சுந்தர்பட்டர் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டது தொடர்ந்து மீண்டும் கோயிலை இந்த ஊர்வலம் வந்தடைந்தது. பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 


நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நரேஷ்குமார், பேஸ்கார் ஹிமத்கிரி, அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு 365 நாட்களுக்கான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.