தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வாக்காளர் தீவிர திருத்தப் பணியில், உயர் அலுவலர் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மற்ற அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, குருவிக்கரம்பை முனுமாக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (47). இவரது மனைவி சித்ரா. கல்லூரியில் படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பழனிவேல் பேராவூரணி வட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதியில், தேர்தல் தொடர்பான பணி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் பணி மற்றும் தன்னுடைய கிராம நிர்வாக அலுவலர் பணி நிமித்தமாக கொளக்குடிக்கும் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதிக்கும் மாறி மாறி அலைந்து திரிந்து பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி பேராவூரணி வட்ட அலுவலகத்தில் தேர்தல் பணி தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இக்கூட்டத்தில், பேராவூரணி தொகுதி தேர்தல் அலுவலரும் முத்திரைத்தாள் துணை ஆட்சியருமான கலியபெருமாள் என்பவர் தேர்தல் பணியை பழனிவேல் ஒழுங்காக செய்யவில்லை. முடிந்தால் செய்யுங்கள் இல்லை என்றால், வேலையை விட்டுச் செல்லுங்கள் என சக அலுவலர்கள், பணியாளர்கள் முன்னிலையில் கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் கடந்த இரு தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 24ம் தேதி மருங்கப்பள்ளம் - சாந்தாம்பேட்டை பகுதியில் தேர்தல் பணியில் இருந்த போது, திடீரென அவருக்கு வாய்குளறி பேச முடியாமல் தவித்த பழனிவேல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடன் அக்கம்பக்கம் இருந்த பொதுமக்கள் அவரை மயக்கம் தெளிவித்து எழுப்பிய போதும் அவருக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அவரை அங்கிருந்து வாகனம் மூலம் பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர். தற்போதும் பழனிவேல் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 

இதுகுறித்து அவரது உறவினர்கள் மற்றும் சக அலுவலர்கள் கூறுகையில், "தேர்தல் பணி தொடர்பாக நேரம் காலம் இல்லாமலும், போதிய அவகாசம் வழங்காமலும், அலுவலர்கள் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர். வாக்காளர் விண்ணப்பத்தினை வாங்கி வந்து வட்ட அலுவலகத்தில் பழனிவேல் ஒப்படைத்தும், அதனை கணினியில் பதிவேற்றம் செய்யாமல் இருந்தது கிராம நிர்வாக அலுவலர் தவறல்ல.

இருந்தும் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையம் வாக்காளர் தீவிர திருத்தப் பணியை ஆரம்பித்ததில் இருந்து அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நல பாதிப்பு, தற்கொலைக்கு முயல்வது, தற்கொலை செய்து கொண்டது என்று தொடர்கதை ஆகியுள்ளது. இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.