தஞ்சாவூர்: திருச்சியிலிருந்து மதுரை வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள சமத்துவ நடைபயணத்தில் வழிநெடுகிலும் மதிமுகவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Continues below advertisement

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். திருச்சி உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து நடை பயணத்தை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, வைகோ மற்றும் மதிமுக இளைஞரணி, தொண்டரணி, மாணவரணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நடைபயணத்தை மேற்கொண்டனர். திருச்சி அண்ணா நகர் சாலை, நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, மத்தியப் பேருந்து நிலையம், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் வரை நடைபயணம் சென்ற வைகோ உள்ளிட்டோர், அங்குள்ள குழந்தை தெரசா தேவாலய வளாகத்தில் மதிய உணவுக்காக தங்கினர்.

Continues below advertisement

பின்னர், மாலை எடமலைப்பட்டி புதூரில் இருந்து புறப்பட்டு திருச்சி- மதுரை நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சென்றடைந்தனர். அங்கு தனியார் அரங்கில் ஓய்வெடுத்தனர். நடைபயணம் செல்லும் வைகோ உள்ளிட்டோருக்கு வழிநெடுகிலும் மதிமுகவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று (ஜன.3) காலை பஞ்சப்பூரிலிருந்து புறப்பட்டு நாகமங்கலம், அளுந்தூர் வழியாக பாத்திமா நகர் செல்கின்றனர்.

முன்னதாக, தொடக்க விழாவில் வைகோ பேசியதாவது: 1986-ல் மகரநெடுங்குழைகாதர் கோயிலில் கொள்ளை போன நகைகளை மீட்க தென்திருப்பேரையில் முதல் நடைபயணம் மேற்கொண்டேன். இதுவரை 10 நடை பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். இந்துத்துவ ஆதிக்க சக்திகள் கூட்டத்தால் தமிழகத்தில் சமய நல்லிணக்கம் பாழ்பட்டுப் போகுமோ என்று அஞ்சும் சூழலை உருவாக்க, டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிவோர் துடிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் சமய சண்டைகள், மதப் பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலைநாட்டவே இந்த நடை பயணத்தை மேற்கொள்கிறேன்.

அதேநேரத்தில், திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டும். அதற்காக தேர்தல் களத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளை மகத்தான வெற்றிபெறச் செய்யுமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்வேன்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர மதிமுக பாடுபடும். இவ்வாறு வைகோ பேசினார். விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் முகைதீன், விசிக தலைவர் திருமாவளவன், திக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி.சேரன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதிமுக பொருளாளர் செந்திலதிபன் நன்றி கூறினார்.