திருவாரூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு கடுமையான சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் உட்பட மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சூறாவளி காற்று அடித்ததில் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் ஆன பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளது. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் பத்து நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள், நேற்றைய சூறாவளி காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன. குறிப்பாக பருத்திச் செடிகள் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளது. திருவாரூர் அருகே கானூர், கள்ளிக்குடி, தென்ஓடாச்சேரி, அக்கரை ஓடாசேரி, வடபாதிமங்கலம், செருவாமணி, விக்கிரபாண்டியம், ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 80 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையில் பருத்தி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பருத்திச் செடிகள் அழுகி இருந்தன. அதனை தண்ணீரை வடிய வைத்து உரம் வைத்து பாதுகாத்தோம் அத்தகைய இடர்பாட்டில் தப்பி பிழைத்த பருத்தி செடிகளில் இருந்து முதல் சுற்று பஞ்சு எடுக்க வேண்டிய நிலையில், சூறாவளி காற்று அடித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே மழைநீர் சூழ்ந்து அழுகிய போதும் மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த நிலையில் இரண்டாவது முறையாக சூறாவளி காற்று அடித்து பருத்திச் செடிகள் முழுமையான சேதமடைந்துள்ளன. எனவே இதுகுறித்த கணக்கெடுப்பை நடத்தி தமிழக அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.