விஜய் அதிரடி சவால்: நேருக்கு நேர் சந்திக்க வாருங்கள் - நாகையில் விஜய் பேசியது என்ன?
“மக்களே நான் உங்களிடம் பேசக்கூடாதா, வரக்கூடாதா, குறைகளை கேட்க கூடாதா, உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா நீங்களே சொல்லுங்கள்” - விஜய்

தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார். இன்று மதியம் நாகையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாகூர் ஆண்டவர் அன்போட, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் என் மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருந்து பேசுகிறேன். கப்பலில் இறங்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்காக அந்த காலத்தில் அந்தி கடை எல்லாம் நாகப்பட்டினத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளேன். எந்த பக்கம் திரும்பினாலும் எப்படி பார்த்தாலும் உழைக்கிற மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம்.

தமிழகத்தில் மின் ஏற்றுமதி 2-ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம் தான். அங்கு நவீன வசதிகளுடன் மீன் பதப்படுத்துகிற நவீன தொழிற்சாலை இல்லை. அதுமட்டுமின்றி அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், ரொம்ப அதிகமாக குடிசை இருக்கும் ஊர் நம்ம நாகப்பட்டினம். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசி, அதை கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம்.
இலங்கை கடற்படையால் நம்ம மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணம் தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது ஒரு தப்பா. நான் மீனவர்களுக்கான இன்று நேற்று அல்ல நாகப்பட்டினத்தில் 14 வருஷத்திற்கு முன்பு 2011ல் பிப்ரவரி 22 மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதிதல்ல. முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கமாக வந்தோம். இப்போ தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்துள்ளோம். அவ்வளவு தான் வித்தியாசம். மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே சமயத்தில், தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தாய் பாசம் காட்டின தலைவனை இழந்து தவிக்கிற அவர்களுக்காக குரல் கொடுக்கிறது நமது கடமை.
மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து விட்டு ஒரு பெரிய கடிதம் எழுதிவிட்டு அதைவிட அமைதியாக போவதற்கு நாடகம் ஆடும் திமுக அரசு கிடையாது. மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நம்ம மீனவர்கள் தமிழக மீனவர்கள் என்று பிரித்து பேசுவதற்கு நாம் ஒன்றும் பாசிச பாஜக கிடையாது. நாகையில் உள்ள மண்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். கடலோர கிராமங்களில் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் அழிவதை பத்தி தடுத்து நிறுத்தி, வழி செய்ய வேண்டிய அரசாங்கத்திற்கு இதைவிட முக்கியமான ஒரு வேலை உள்ளது. இங்கு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்கு தீர்வாக காவிரி தண்ணீரை கொண்டு வரலாம். கடல்சார்ந்த படிப்புகளையும் பயிற்சிகளையும் அளிக்கும் இடம் கொண்டு வரலாம்.
மீன் சம்பந்தமாக எந்த தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தினார்களா. வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என இங்கு இருக்கும் சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தலாம். வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கு செய்வதற்கு வசதி ஏற்படுத்தி செய்யலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் டாக்டர் இல்லையாம். நாகை புது பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்களா. நாகை ரெயில் நிலைய வேலையை விரைந்து முடிக்கலாம். இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் ஆலையையும், ரெயில் பெட்டி தொழிற்சாலையையும் மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலக்கோட்டை வாசல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டி 50 ஆண்டுகள் ஆகிறது. அதை மேம்படுத்தலாம். பயன்படுத்தினார்களா. தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இன்னும் முடித்தபாடில்லை அதையும் வேகப்படுத்தி முடித்திருக்கலாம் அதையும் செய்யவில்லை. கடந்த வாரம் திருச்சிக்கும், அரியலூர் மாவட்டத்துக்கும் மக்களை சந்திக்க சென்றிருந்தேன். பெரம்பலூர் போக வேண்டி இருந்தது ஆனால் சில விதிமுறைகள் இருந்தது. ஆனால் இந்த பஸ் நகரவில்லை. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நான் உங்களைத் தேடி வருவேன்.
நான் உங்களை வந்து பார்க்கும் பொழுது உங்களுக்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது. முக்கியமாக வேலைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு இருக்கக் கூடாது. இந்த காரணத்தினால் தான் வார இறுதியில் மக்களை சந்திக்கும் அட்டவணையை ஏற்படுத்தினோம். அரசியலில் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா. அதனாலதான் ஓய்வு நாட்களைப் பார்த்து நாட்களை தேர்ந்தெடுத்துள்ளோம். மக்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். அங்கு அனுமதியில்லை. இங்கு அனுமதி இல்லை. நான் பேசுவதே குறநை்த நேரம் தான். அதிலும் கட்டுப்பாடு. அதற்கான காரணங்கள் சொத்தையாக தான் இருக்கும். அரியலூர் போவதற்கு முன்னாடி அந்த பகுதியில் மின்தடை. திருச்சியில் போய் பேச ஆரம்பித்த உடன் ஒலிபெருக்கி செல்லும் ஒயர் துண்டிப்பு. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் சி.எம்.சார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர் வந்தால் இந்த மாதிரி கட்டுப்பாடுகள் போடுவீங்களா. பஸ்சுக்குள் இருந்து வெளியே வரக்கூடாது. கையை இவ்வளவுதான் தூக்க வேண்டும். இப்படியே தான் வர வேண்டும். மக்களை பார்த்து சிரிக்க கூடாது. மக்கள் வந்து நிம்மதியா நின்று பார்ப்பதற்கு ஒரு இடம். அதை தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனால் நீங்கள் நெருக்கடி மிகுந்த இடமாக தேர்வு பண்ணி கொடுக்கிறீங்க.
அரசியல் தலைவர் என்பதை மறந்து விடுங்கள். ஒரு சாதாரணமான தமிழ்நாட்டு மண்ணோடு, மகனாக தமிழ் மக்களின் சொந்தக்காரனாக மக்கள், என் குடும்பத்தை என் சொந்தங்களை பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள். அப்போதும் தடை செய்வீர்களா. வேணாம் சார் இந்த அடக்குமுறை அராஜக அரசியல் வேணாம் சார். தனியாள் இல்லை சார். மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன். மாபெரும் இளைஞர் இயக்கம் தான். 2026 இல் இரண்டு பேருக்கு மத்தியில்தான் போட்டி. ஒன்னு த.வெ.க.- தி.மு.க. இடையே தான் போட்டி. இந்த பூச்சாண்டி வேலை காட்டுவதை நிறுத்திவிட்டு தில்லாக, கெத்தாக நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவனாக இருக்கிற விஜய்யா என்பதை பார்த்து விடலாம். இனிமேல் இந்த தடை எல்லாம் போட்டீர்கள் என்றால், நேரடியாக மக்களிடமே அனுமதி கேட்டு விடுவேன். மக்களே நான் உங்களிடம் பேசக்கூடாதா, வரக்கூடாதா, குறைகளை கேட்க கூடாதா, உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா நீங்களே சொல்லுங்கள். இவ்வாறு தடையாக போடும் தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா. உங்க நல்லதுக்காக நம்ம உங்கள் த.வெ.க.க்கு ஆட்சி அமைய வேண்டுமா?
இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. துரத்தி கொண்டே இருக்கும். தைரியமாக இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். நாகையில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விஜய் திருவாரூர் புறப்பட்டு சென்றார்.




















