தஞ்சாவூர்: கரூர் துயர சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்க வேண்டும். அவருடன் உள்ளவர்கள் அவருக்கு தவறான ஆலோசனைகள் தெரிவித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் நிதானமாக செயல்பட்டு வருகிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாதாவது: கரூர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புடன், நிதானமாக செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு யாரையும் கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாக போய்விட்டது. இதில் எப்ஐஆர் போட வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. இதனால், நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நடுநிலையாக பார்க்கும் போது எல்லாம் சரியாக தான் நடக்கிறது.
அதேபோல் தவெக ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் அவர் மீது கண்டனம் தெரிவித்து இருக்காது. ஆனால் தங்களின் மீது பழி வந்து விடும் என ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அமைதியாக இருந்து இருப்பார் என நான் நினைக்கிறேன்.
இவ்விவகாரத்தில் பல தலைவர்கள் நிதானமாக பேசினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்து, மக்களின் வரிப்பணத்தை ருசித்தவர்கள். ருசி கண்ட பூனை போல, எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகவும், பதவி ஆசை எல்லாம் தாண்டி பதவி வெறியில் ஆட்சியாளர்களும், ஆளும் கட்சியும் தான் காரணம். இது சதி என எடுத்துக்கொண்டு, “ஆடு நனையுது என்பதற்காக ஓநாய் அழுகும்” கதையாக, தவெகவின் வழக்கறிஞராக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இது விதியின் சதி தான்.
கூட்டணி கிடைக்காத நேரத்தில், கூட்டணி பற்றி பழனிசாமி பேசுகிறார். விஜய் கூட்டணி பற்றி பேசும் மனநிலையில் இருப்பாரா? விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என பழனிசாமி நினைப்பது தவறு கிடையாது. ஆனால், பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என தலைகீழாக நின்றாலும் நடக்காது. அவரை வீழ்த்தாமல் அமமுக ஓயாது. தமிழகம் முழுவதும் எங்களின் தொண்டர்கள், பழனிசாமியின் ஓநாய் வேஷத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது பழனிசாமி உடனே செல்லவில்லை, பயந்துக்கொண்டு வெகு நாள்களுக்கு பிறகு சென்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உடனே கரூருக்கு சென்று விட்டார். இதை வைத்து அரசியல் பேசும் தலைவர்களை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கூட்டணிக்காக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசுவதை தரம் தாழ்ந்த அரசியலாக நான் பார்க்கிறேன். பாஜகவின் எம்பிக்கள் குழு அமைத்து, பழனிசாமிக்கு நிகராக பாஜக அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தின் போது இது போன்ற குழுவும் வரவில்லை. கரூரில் நடந்த கொடிய துயரத்தை அரசியல் ஆக்காமல், வரும் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஒரு உயிர் கூட போகாமல் கையாள வேண்டும். இது வருங்காலத்துக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
விஜய் அரசியலுக்கு புதியவர். அவரை சுற்றி இருப்பவர்களும் அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதால் இது போன்ற பிழை தான் ஏற்பட்டுள்ளது. விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை தவிர, வேறு யாராக இருந்தாலும் எனக்கு ஒன்றும் கிடையாது. எனக்கு அதிமுக மீது எந்த விரோதமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ரொம்ப கம்போர்ட்டாக இருந்தோம். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என இருந்த சட்டத்தை மாற்றி, 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என “டெண்டர் ஸ்டைலில்” பழனிசாமி மாற்றியுள்ளார்.
இதனால், இது அதிமுகவாக இல்லை, இடிஎம்கேவாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வருவதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.